சாலை போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்து தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில் அபராத தொகைகள் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட உயிர்காக்கும் வாகனங்கள் சாலைகளில் செல்லும்போது வழிவிட தவறினால், அதற்கு இடையூறாக செயல்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படும். அபாயகரமான விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், பைக் ரேஸில் ஈடுபடுதல், மாசு ஏற்படுத்தும் வாகனங்கள், தடை செய்யப்பட்ட இடங்களில் தேவையற்ற ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தினாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இருசக்கர வாகனத்தில் வாகன ஓட்டுநர் குடித்திருந்து பின்னால் அமர்ந்திருக்கும் நபர் மது குடிக்காமல் இருந்தாலும் ஓட்டுனருக்கு அபராதம் விதிப்பது போல பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் அபராதம் விதிக்கப்படும். மேலும், லைசென்ஸ் இல்லையென்றால் இனி ரூ. 5,000 அபராதமாக விதிக்கப்படும். ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ. 1,000 அபராதம், காப்பீடு செய்யாத வாகனத்தை இயக்கினால் ரூ. 4,000 அபராதம், பதிவு செய்யப்படாத வாகனத்தை இயக்கினால் ரூ. 5,000 அபராதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.