திரிபுரா மேற்கு மாவட்ட நீதிபதியும் கலெக்டருமான டாக்டர் ஷைலேஷ் குமார் யாதவ், கடந்த திங்களன்று ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடந்து கொண்டிருந்தபோது காவலர்களுடன் திடீர் சோதனையிட்டார். அங்கு வந்திருந்த விருந்தினர்களை வெளியேற உத்தரவிட்டதுடன் மணமகனை காலரை பிடித்து தரதரவென இழுத்து சென்றார். திருமணம் நடத்த வந்திருந்த புரோகிதரை கடுமையாக தாக்கியுள்ளார். கொரோனாவை காரணம் காட்டி இந்த திருமணத்தை நிறுத்த வெறித்தனமாக முயன்றுள்ளார். ஆனால் அந்த திருமணத்தை நடத்த அவர்கள் முன்னதாக அனைத்து விதமான அரசு ஒப்புதல்களையும் பெற்றிருந்தனர். அதற்கான ஆவணத்தை காண்பித்தபோது அதனையும் கிழித்து எறிந்துள்ளார் அந்த மாவட்ட நீதிபதி. பின்னர் இதற்காக திருமண மண்டபத்தை சீல் வைத்ததுடன் குறிப்பிட்டப் பகுதியின் காவல் நிலைய அதிகாரியையும் இடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார். இவரின் இதுபோன்ற மூர்கத்தனமான நடவடிக்கைக்கு பா.ஜ.க எம்.பி பிரதிமா பௌமிக் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.