இரண்டு நாட்களுக்கு முன் பிரதமர் மோடி, ‘பரிக்ஷா பே சர்ச்சா’ என்ற தலைப்பில், மாணவர்களின் பரிட்சை பயத்தை போக்கும் வகையில் அவர்களுடன் கலந்துரையாடினார். இதற்கு மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் என அனைத்து தரப்பில் இருந்தும் நல்ல வரவேற்பு இருந்தது. வெளிநாடுகளில் இருந்தும் பலர் இதில் கலந்துகொண்டனர். தொடர்ந்து நான்காவது முறையாக நடந்த இந்த நிகழ்வு, இளைய தலைமுறையினர் மீதான பிரதமர் மோடியின் அக்கறையை காட்டுகிறது. மற்ற நாட்டு பிரதமர்களுக்குகூட முன்னுதாரணமாக திகழ்கிறது இந்த நிகழ்வு. ஆனால் எதிர்கட்சியினருக்கு மட்டும் ஏனோ அவர் என்ன செய்தாலும் அதில் எதாவது குற்றங்கள் சொல்லி அரசியல் செய்ய வேண்டும் என்ற கீழ்தரமான மனநிலை மட்டும் மாறவில்லை.
உதாரணமாக, இந்த ‘பரிக்ஷா பே சர்ச்சா’ நிகழ்வில், மோடி, ‘படிக்கும்போது, மாணவர்கள் முதலில் கடினமான பாடங்களை முயற்சிக்க வேண்டும். ஆனால் பரிட்சை நேரங்களில், எதிர்மாறாகச் செய்வது நல்லது. அனைத்து பாடங்களுக்கும் சமமான நேரத்தை ஒதுக்க வேண்டும். கடினமான அத்தியாயங்கள் அல்லது தலைப்புகள் முதலில் புதிய உற்சாகமான மன நிலையுடன் அணுக வேண்டும், இது எளிதானவற்றை மேலும் எளிதாக உணர வைக்கும். கடினமான கேள்விகளை பிறகு என ஒத்திவைப்பது, நமது வாழ்க்கையிலும் தள்ளிப்போடும் பழக்கத்தை உருவாக்குகிறது. மாணவர்கள் கடினமான பாடங்களை, கேள்விகளை முழுவதுமாக தவிர்க்க முனைகிறார்கள் என்று கூறிய பிரதமர், நம்பிக்கையைப் பெற முதலில் கடினமான பாடங்களை முயற்சித்துப் படிக்க வேண்டும்’ என மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இதற்கு உதாரணமாக, ‘தான் காலையில் கடினமான பிரச்சினைகளை புதிய, உற்சாக மனநிலையுடன் சந்திக்க விரும்புவேன்’ என்று தனது குஜராத் முதல்வராகவும், பாரதப் பிரதமராகவும் இருந்த தனது அனுபவத்தையும் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
பிரதமரின் இந்த ஆலோசனைகள், பரிட்சைகளின் அடிப்படையில் இல்லாமல் மனநல ஆய்வுகளின் அடிப்படையும் பின்னணியும் கொண்டது, அதற்கான சரியான உதாரணங்கள், விளக்கங்கள் அவரால் தரப்பட்டன என்பதை உணராமல், காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர் கட்சிகள், ஆஜ்தக் உள்ளிட்ட சில சார்பு ஊடகங்கள் மேலும் சில சார்பு முன்னாள் அதிகாரிகள் என பலரும் ‘பிரதமர் மோடி, கடினமான கேள்விகளையே மாணவர்கள் முதலில் முயற்சிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார். இது தவறான ஆலோசனை, மாணவர்களின் அழிவுக்கு வழி வகுக்கும்’ என அவரின் செய்தியை, அதன் உண்மையான அர்த்தத்தை திரித்துக் கூறி அதிலும் அரசியல் செய்து வருகின்றனர்.
எதில் எதிலோ அரசியல் செய்யும் இந்த அரசியல்வாதிகள், மாணவர்களின் படிப்பிலும் வாழ்விலும்கூட தங்களின் அரசியலை தொடர்வது, எதிர்கால தலைமுறையினரை பாதிக்கும் ஆபத்தான செயல்.