அமெரிக்காவில் கடந்த 9/11 அன்று நடைபெற்ற ஹிந்துத்துவ எதிர்ப்பு மாநாடு குறித்த கட்டுரையை பிரபல பத்திரிகையாளர் பிரான்சுவா கௌடியர் ‘என் பெயர் பிரான்சுவா கௌடியர், நான் ஹிந்துத்துவாவின் சிப்பாய்’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
நான் ஒரு பிரெஞ்சுக்காரன், கத்தோலிக்கனாக பிறந்து வளர்ந்தவன், நான் ஹிந்துத்துவாவின் ஆதரவாளன். நான் ஹிந்துத்துவாவின் சிப்பாய்.
ஹிந்துத்துவா என்றால் என்ன? உலகில் அதிகம் துன்புறுத்தப்பட்ட அதே சமயம் மிகவும் சகிப்புத்தன்மையுடைய, மக்களில் ஒருவராக உள்ள ஹிந்துக்களின் கோட்பாடு, அரசியல், லட்சியவாதம் என்று அதனை கூறலாம். ஒரு எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும் ஹிந்துக்களை நான் பாதுகாக்கிறேன். ஏனென்றால் ஹிந்து மதத்தின் பின்னால், நித்திய ஆன்மீகம் உள்ளது, அது, ‘வசுதைவ குடும்பகம்’ எனும் உலகளாவிய இயல்புடையது.
இன்று உலகின் இரண்டு பெரிய ஏகத்துவ மதங்கள் தங்கள் கடவுள் மட்டுமே உண்மையானது என்று நம்புகின்றனர். வற்புறுத்தியோ, மிரட்டியோ, நிதி கொடுத்தோ மொத்த மனிதகுலத்தையும் அந்த மதத்திற்கு மாற்றுவதே தங்களின் கடமையாகக் கருதுகின்றனர்.
ஆனால், ஹிந்து மதம் பழங்காலத்திலிருந்து தெய்வீகத்தை மட்டுமே நம்புகிறது. அந்த தெய்வீகம், வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு பெயர்களுடன் வெளிப்படுவதாக நம்புகின்றனர். ஒரு ஹிந்து மசூதி, தேவாலயம், குருத்வாராவில் நுழைய முடியும். அதனை பாவம் என்று அவர்கள் கருதுவது இல்லை. ஆனால், மற்ற மதத்தினர் அப்படி அல்ல.
இதனால்தான், கிறிஸ்தவர்கள், சிரியர்கள், யூதர்கள், பௌத்தர்கள் உட்பட உலகில் துன்புறுத்தப்பட்ட ஒவ்வொரு மத சிறுபான்மையினரும் பாரதத்தில் தஞ்சம் அடைந்தனர்.
நான், ஒரு வெள்ளைக்காரனாக, ஒரு பத்திரிகையாளனாக, ஒரு வெளிநாட்டவனாக, பாரதத்தில் முழு சுதந்திரத்தை அனுபவித்திருக்கிறேன். நான் அரசை விமர்சித்துகூட சுதந்திரமாக எழுத முடியும். ஆனால் மற்ற நாடுகளில்?
ஆகவே, அமெரிக்காவில் ஹிந்து மதத்தை நாசிசத்துடன் ஒப்பிட்டு, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியை, ஹிட்லருடன் ஒப்பிட்டு, ஹிந்து அமைப்புகளை தலிபான்களுடன் ஒப்பிட்டு அமெரிக்காவில் நடந்த மாநாட்டைப் பார்க்கும்போது அது என் இதயத்தை உடைக்கிறது, கோபப்படுத்துகிறது. இம்மாநாடு உலக வர்த்தக மைய தாக்குதல் அனுசரிப்பு தினத்தில் நடத்தப்பட்டது முற்றிலும் அவதூறானது.
அவர்களின் பிரச்சனை ஹிந்தாலஜி சார்ந்தது. அவர்கள் கிறிஸ்தவ நாகரிகம் உயர்ந்தது என்று நம்புகின்றனர். அதனால் ஹிந்துத்துவாவை சிறுமைப்படுத்த முயற்சிக்கின்றனர். இன்றைய நவீன ஹிந்தாலஜிஸ்டுகள், மேக்ஸ் முல்லரின் அதே விதிமுறைகளை பின்பற்றுகிறார்கள். பாரத தேசத்தவர், ஹிந்துக்கள் தாழ்ந்தவர்கள் என்று தன்னை அறியாமலேயே நம்புகின்றனர்.
நான் பாரதத்தில் 40 வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன். அங்கு பரந்த அளவில் பயணம் செய்துள்ளேன். சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ அரவிந்தர் முன்னறிவித்தபடி பாரதம் உலகின் ஆன்மீகத் தலைவராக மட்டும் மாறாது. அது பொருளாதார, அரசியல், ராணுவ, புவிசார் அரசியல் வல்லரசாகவும், மேற்கத்திய நாடுகளின் சிறந்த நட்பு நாடாகவும் மாறும் என்பது எனது நம்பிக்கை. ஏனெனில் அது சீனாவை போல அல்ல. பாரதம், அதன் ஆன்மீகத்தை இன்றும் உயிர்ப்போடு வைத்துள்ளது.
இது சனாதன தர்மம், இது நித்திய மதம், இது உங்களுக்கு முன்பே தெரியாது, ஆனால் நான் இப்போது உங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளேன். எனவே, நீங்கள் விரும்பினால் என்னை ஹிந்துத்துவாவின் சிப்பாய் என்று அழைக்கலாம்.