வேட்டையாடும் சீனா

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக்கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் சீனா இருக்கலாம் என ஜப்பான் மக்களும் சர்வதேச அரசியல் நோக்கர்களும் சந்தேகம் தெரிவித்து வரும் சூழலில், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள தங்களுக்கு எதிரான விமர்சகர்கள் மற்றும் அதிருப்தியாளர்களை கொல்ல, மௌனமாக்க தனது உளவாளிகளின் உலகளாவிய வலையமைப்பை சீனா உருவாக்கியுள்ளது, தனது அதிருப்தியாளர்களை வெளிநாடுகளில் வேட்டையாடுகிறது என்று சமீபத்தில்,வெளியான அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவை சேர்ந்த ஃபிரீடம் ஹவுஸ் என்ற லாப நோக்கற்ற அமைப்பு வெளியிட்டுள்ள அதன் அறிக்கையில், 2014 மற்றும் 2021க்கு இடையில் 735 நாடு கடந்த அடக்குமுறை சம்பவங்களை ஆவணப்படுத்தியுள்ளது. ஆதில், “சீனா உலகில் நாடுகடந்த அடக்குமுறையின் அதிநவீன, உலகளாவிய விரிவான செயல்பாடுகளை 3 வகைகளில் நடத்துகிறது. முதலாவதாக, பல இன மற்றும் மத சிறுபான்மையினர், அரசியல் எதிர்ப்பாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் உள்நாட்டு நபர்கள் உட்பட பல குழுக்களை இவர்கள் குறிவைக்கின்றனர். இரண்டாவதாக தங்கள் தந்திரோபாயங்களின் முழு வீச்சை பயன்படுத்துவது, நேரடி தாக்குதல்கள், உடல்ரீதியான தாக்குதல்கள் நாடு கடத்தப்பட்டவர்களை தடுத்து நிறுத்துவதற்கு, திரும்ப கொண்டுவருவதற்கு மற்ற நாட்டு அரசுகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் இணைந்து செயல்படுவது, இயக்கக் கட்டுப்பாடுகள், டிஜிட்டல் அச்சுறுத்தல்கள், ஸ்பைவேர், ப்ராக்ஸி மூலம் வற்புறுத்துதல் போன்ற மிகக்கடுமையான முறைகள் கையாளப்படுகின்றன. மூன்றாவதாக, இதனை செயல்படுத்த அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் ஆழமும் அகலமும் உலக அளவில் ஈடு இணையற்றவை. சீனாவின் செல்வாக்கு ஒரு தனிப்பட்ட வழக்கில்கூட சட்டத்தின் ஆட்சியை மீறுவது மட்டுமல்லாமல், சட்ட அமைப்புகளையும் சர்வதேச விதிமுறைகளையும் அதன் நலன்களுக்கு மாற்றியமைக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தது” என கூறியுள்ளது.