மனிதக் கழிவகற்றும் ரோபோ

பாரதத்தில் மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் முறைக்கு தடை உத்தரவுகளும் அமலில் இருந்த போதிலும், பாரதம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மரணங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. இந்நிலையில், கழிவுநீர்த் தொட்டிகளில் மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் முறையை ஒழிப்பதற்காக சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐ.ஐ.டி மெட்ராஸ்) ரோபோவான ‘ஹோமோசெப்’ தற்போது களப் பணிக்குத் முழுமையாகத் தயார்நிலையில் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 10 இயந்திரங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டு, அதற்கான இடங்களைக் கண்டறிவது தொடர்பாக தூய்மைப் பணியாளர்களுடன் ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே தொடர்பில் உள்ளனர். மேலும், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. மேலும், மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் முறையை ஒழிக்கப் பாடுபட்டுவரும் சஃபாய் கர்மசாரி ஆந்தோலன் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினருடனும் இக்குழுவினர் தொடர்பு கொண்டுள்ளனர். ஹோமோசெப் ரோபோவில் உள்ள தனிப்பயனாக்கப்பட்ட ரோட்டரி பிளேடு மெக்கானிசம் மூலம் கழிவுநீர்த் தொட்டியில் உள்ள கடினமான கசடுகளையும் ஒன்றுசேர்த்து, உறிஞ்சும் தொழில்நுட்பம் மூலம் தொட்டியில் உள்ள கழிவுகளை பம்ப் செய்யமுடியும். உரிய பயிற்சி, தகுந்த வழிகாட்டுதலுடன் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் துப்புரவுத் தொழிலாளர்கள் தாங்களே ஹோமோசெப் ரோபோவை இயக்க முடியும். இதற்கான ஆராய்ச்சி கடந்த 2019 முதல் நடைபெற்று வந்தது. இதற்கு கெயில் நிறுவனம், கேப் ஜெமினி, எல்&டி, வின் பவுண்டேஷன் போன்ற பல நிறுவனங்கள் தொழில் நுட்ப உதவியும், சமூகப் பொறுப்பு நிதியும் அளித்து ஆதரவளித்துள்ளன.