யு.பி.ஐ இன்னும் எத்தனை நாள் இலவசம்?

பாரதத்தில் டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள் சேவைகள் குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைய மிக முக்கியமான காரணம் ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்படும்இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்.பி.ஐ.சி) உருவாக்கிய யு.பி.ஐ (Unified Payments Interface)செயல்பாடுகள் தான். இது தன் அளவில் ஒரு தனிப்பட்ட செயலி கிடையாது. அது ஒரு சேவை அல்லது தொழில்நுட்பத்தின் பெயர். இதில், நாம் கணக்கு வைத்துள்ள வங்கியின் செயலியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. எந்த செயலியை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதற்கு என்று பாரதத்தில் தனி செயலிகள் பல உள்ளன. அந்த செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் நம்முடைய வங்கி கணக்கை இணைத்துவிட்டால், யு.பி.ஐ சேவையை பயன்படுத்த முடியும். இது பணப் பரிமாற்ற முறையில் அடுத்த கட்டம் என சொல்லலாம். பாரதத்தில் ஜூலை 2016ல் யு.பி.ஐ பணப் பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ. 38 லட்சம் மட்டுமே, ஆனால் ஜூலை 2022ல் அது ரூ.10 லட்சம் கோடிகள். பொதுவாக, நாம் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை வைத்து பரிவர்த்தனை செய்யும்போது ஒவ்வொரு முறையும் அதில் ஒரு சிறிய தொகை அதில் வங்கி சேவைக்காக வணிகரிடம் இருந்து எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், யு.பி.ஐ முறையில் அது தற்போது வரை இலவசமாக உள்ளதால் அனைவரும் இதனை நாடுகின்றனர். மேலும், அனைத்து தரப்பினரும் இதனை எளிதாகப் பயன்படுத்த முடிகிறது. இதனை செயல்படுத்தி வரும் என்.சி.பி.ஐ அமைப்பு மத்திய அரசின் கீழ் இயக்கும் ஒரு லாப நோக்கற்ற நிறுவனமாக இருந்தாலும், யூ.பி.ஐ சேவை தளத்தில் அது சில செலவுகளைச் சமாளிக்க வேண்டியது கட்டாயத்தில் உள்ளது. இதற்காக, இந்த அமைப்பு ஒவ்வொரு மாதமும் 1,250 கோடி ரூபாய் செலவு செய்து வருகிறது. இது மிகப்பெரிய தொகை. இதனால் எத்தனை நாள் அரசு, அதிகப்படியான தொகையை இழந்து இலவச சேவைகளை அளிக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. பாரதத்தின் கட்டணச் சூழல் அமைப்பு பற்றி ரிசர்வ் வங்கி வெளியிட்ட சமீபத்திய ஆய்வறிக்கை இதனை விளக்குகிறது. மேலும் இதுகுறித்து பொது மக்களிடம் இருந்து முக்கியமான மூன்று கேள்விகளுக்கு கருத்துக்களை ஆர்.பி.ஐ கேட்டுள்ளது. அவை: 1. யு.பி.ஐ’யில் கட்டணம் இருந்தால், அது நிலையான கட்டணமாக வேண்டுமா அல்லது பரிவர்த்தனையின் மதிப்பின் அடிப்படையில் வேண்டுமா? 2. அந்த கட்டணத்தை யார் தீர்மானிப்பது ரிசர்வ் வங்கியா அல்லது சந்தையில் இருக்கும் நிறுவனங்களா? 3. கட்டணம் எதுவும் விதிக்கப்படவில்லை என்றால், அதற்கு அரசாங்கம் மானியம் வழங்க வேண்டுமா? இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி எந்த முடிவையும் எடுக்கவில்லை, கருத்து மட்டுமே கேட்டுள்ளது என்பதையும் ஆர்.பி.ஐ தெளிவுபடுத்தியுள்ளது.