பாரதம் முழுவதும் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் திட்டம் மத்திய அரசால் துவக்கப்பட்டு உள்ளது. அவ்வகையில், தமிழகத்தில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை பா.ஜ.கவை சேர்ந்த மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் சென்னையில் கோயம்பேடு பகுதியில் துவக்கி வைத்தார். அப்போது பேசிய அமைச்சர், ‘தமிழகத்திற்கு 6.32 கோடி தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசிடமிருந்து வழங்கப்பட்டுள்ளன. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின் முதல் தவணையை 100 கோடி பேருக்கு மேல் செலுத்தி உலகிலேயே முதன்மை நாடாக பாரதம் இருக்கிறது. இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்கச் சாதனை. மாநில அரசுகளின் ஒத்துழைப்போடும், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார முன்களப் பணியாளர்கள், பொது மக்களின் ஆதரவோடும் இது சாத்தியமாகியுள்ளது. மத்திய அரசு தீபாவளி பரிசாக பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. புதுச்சேரி, கர்நாடகாவிலும் மதிப்புகூட்டு வரிகள் குறைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசும் வரியைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’ என தெரிவித்தார்.