ஏழைகளுக்கான வீடுகள்

ஏழை மக்களுக்காக, பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் தேசம் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் இத்திட்டத்தை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் செயல்படுத்துகிறது. இத்திட்டத்தில் ஒரு வீட்டுக்கான செலவில், 1.50 லட்சம் ரூபாயை மத்திய அரசும், 7 லட்சம் ரூபாயை மாநில அரசும் ஏற்கின்றன. மீதித் தொகையை பயனாளிகள் தர வேண்டும். நகர்ப்புற பகுதிகளில் 350 சதுர அடியில் வீடுகள் கட்டப்படுகின்றன. தமிழகத்தின் 36 மாவட்டங்களில், ரூ. 17,195 கோடி மதிப்பீட்டில் 1.66 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. தமிழக அரசு பரிந்துரைத்த 377 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இத்திட்டத்தில் இதுவரை 27,496 வீடுகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 39 ஆயிரத்து 544 வீடுகள் கட்டும் பணிகள் விரைவில் துவக்கப்படும். எஞ்சிய வீடுகளை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா, ஊரடங்கால் கட்டுமான பொருட்கள், பணியாளர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல், சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல்கள் போன்றவை காரணமாக பணிகளில் தாமதம் ஏற்பட்டது. தற்போது பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன என்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.