பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் டஹர்கி நகரத்தில் வசிக்கும் தஹார் சமூகத்தைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க ஹிந்து தொழிலதிபர் சாத்தான் லால் என்பவர் திங்கட்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான ஹிந்துக்கள் தேசிய நெடுஞ்சாலையை மறித்தும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, லாலைக் கொன்றதாக பச்சல் தஹார், அவரது கூட்டாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர். சில மாதங்களுக்கு முன் சைதன் லால் வெளியிட்ட வீடியோவில், “என்னைக் கொன்று விடுவதாகவும், கண்களை பறிக்கப் போவதாகவும், கை, கால்களை வெட்டுவதாகவும் மிரட்டுகிறார்கள். பாகிஸ்தானை விட்டு வெளியேறச் சொல்கிறார்கள். நான் இந்த நாட்டைச் சேர்ந்தவன், இங்கே இறப்பதையே விரும்புவேன், சரணடைய மாட்டேன். சாலையோர நிலம் எனக்குச் சொந்தமானது, அதை நான் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்?” என்று கூறியிருந்தார். மேலும், தனக்கு நீதி வழங்க வேண்டுமென பாகிஸ்தான் தலைமை நீதிபதி மற்றும் பிற அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்த அவர், தன்னைக் கொல்லப் போவதாக மிரட்டுபவர்களின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார்.