சென்னை பூந்தமல்லி அருகே பழஞ்சூரில் குயின்ஸ் லேண்ட் என்னும் தனியார் பொழுது போக்கு பூங்கா அமைந்துள்ளது. கடந்த 2019ல் இங்கு ஃப்ரீ ஃபால் டவர் என்னும் ராட்டினத்தின் ஒயர்கள் அறுந்து விழுந்ததும் நல்லவேளையாக பெருத்த உயர் சேதம் தவிர்க்கப்பட்டதும் நினைவிருக்கலாம். இந்நிலையில் இந்த பொழுது போக்கு பூங்கா அமைந்துள்ள நிலம் கோயிலுக்கு சொந்தமானது, அதனை மீட்க வேண்டும் என அடுத்த சர்ச்சை எழுந்தது.
சமீபத்தில், தமிழக ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, குயின்ஸ் லேண்ட் பொழுது போக்கு பூங்கா அமைந்துள்ள 177 ஏக்கர் நிலம் ஹிந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமானது. சட்டப்போராட்டம் நடத்தி குயின்ஸ் லேண்ட் அமைந்துள்ள நிலம் கோயில் நிலம் என உறுதிப்படுத்தி அதை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஆனால், இதற்கு பின்னணியில் கோயில் நிலத்தை காக்க இந்து முன்னணி அமைப்பு தொடர் போராட்டம் நடத்தி, வழக்கு தொடுத்து, நீதிமன்ற உத்தரவு பெற்று, அதன் பேரில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராடியது என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இறுதியில் அமைச்சர் இது குறித்து அறிவித்த பிறகே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.