ஹிந்து அறநிலையத்துறை தேவையற்றது

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் கோயிலில் உலக சிவனடியார்களுக்கான அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், மதுரை ஆதீனம், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் உள்ளிட்ட ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய பொன்மாணிக்க வேல், “தமிழகத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை தேவையற்றது. பக்தர்கள் உண்டியல்களில் பணத்தை போடாதீர்கள். வாழ்வாதாரமின்றி வறுமையில் தவிக்கும் அர்ச்சகர்களின் தட்டில் பணத்தை போடுங்கள். ஆண்டவன் தான் அதிகாரிகளுக்கு பிச்சை போட வேண்டும். அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ ஆண்டவனுக்கு பிச்சை போட முடியாது. கோயில்களில் உள்ள கல்வெட்டுகளில் இருந்து அரசு அதிகாரிகளின் பெயர்களை உடனே நீக்க வேண்டும். கோயில்களில் இருக்கும் சாமி சிலைகளுக்கு அபிஷேகம், ஆராதனை நடத்தப்படும். அப்போதுதான் அந்த சிலைகள் உருவாக்கப்பட்டதற்கான பலன் கிடைக்கும். பழமையான கோயில்களில் இருந்து திருடப்பட்ட சாமி சிலைகளை அரசு மீட்டெடுத்துள்ளது. ஆனால் அந்த சிலைகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட கோயில்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. மாறாக அருங்காட்சியகங்களில் காட்சிப்பொருளாக வைக்கப்படுகின்றன. சென்னை அருங்காட்சியகத்தில் 2,500க்கும் மேற்பட்ட புராதானமான சுவாமி சிலைகள் உள்ளன. அச்சிலைகளை, ஆகம விதிபடி மீண்டும் அதே கோயில்களில் மீண்டும் பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபட அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும். அருங்காட்சியகங்களில் சாமி சிலைகளை வைத்திருப்பது ஆன்மிக உணர்வாளர்கள் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. அவற்றை மக்கள் வழிபடும் இடத்தில் வைக்க வேண்டும் என்பதே அவர்களின் நீண்டகால கோரிக்கை. இதனை, செய்யுமாறு அரசுக்கு நாம் மனு கொடுக்க கூடாது. அது தெய்வத்தை இழிவுப்படுத்துவது போல அமைந்து விடும். அரசே முன்வந்து இதனை செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.