கேரள மாநிலம் பாலக்காட்டில் கடந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர் சஞ்சித் கொல்லப்பட்ட வழக்கு விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நேரில் ஆய்வு செய்யுமாறு கேரள மாநில காவல்துறைத் தலைவர் மற்றும் டி.ஜி.பிக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படும் வரை இரு வாரங்களுக்கு ஒருமுறை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் காவல்துறைத் தலைவருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) மற்றும் அதன் அரசியல் பிரிவான எஸ்.டி.பி.ஐ கட்சியினர் இந்த கொலையில் சம்பந்தப்பட்டு இருப்பதால் இந்த கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என சஞ்சித்தின் மனைவி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், விசாரணையை மாநில காவல்துறையிடம் இருந்து சி.பி.ஐக்கு மாற்ற நீதிமன்றம் மறுத்துவிட்டது. அப்போது பி.எப்.ஐ மற்றும் எஸ்.டி.பி.ஐ ஆகியவை வன்முறையில் ஈடுபடும் தீவிரவாத அமைப்புகள்தான் என்றாலும், அவை தற்போதுவரை தடை செய்யப்பட்ட அமைப்புகள் அல்ல என்று குறிப்பிட்டது.