கார்சினியா கம்போஜியோ என்று தாவரவியலாளர்களால் குறிப்பிடப்படும் பழ நறுமணப் பயிரான குடம்புளிக்கு மலபார் புளி என்ற பெயரும் உண்டு. இலங்கையில் இது சீமை கொறுக்காய் என்றழைக்கப்படுகிறது. இந்தோனேஷியாவை தாயகமாகக் கொண்ட இது கட்டியபரேயி என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்ததாகும். இந்தோனேஷியாவில் மட்டுமல்லாமல் மலேஷியா, தாய்லாந்து, ஆப்பிரிக்காவின் மேற்கு, மத்திய நாடுகள் ஆகியவற்றிலும் இது காணப்படுகிறது. பாரதத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் இது பரவலாக உள்ளது. குறிப்பாக கேரளாவில் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது. கர்நாடகாவில் குடகு மலைப்பகுதியிலும் தமிழ்நாட்டில் நீலகிரி பகுதியிலும் இது காணப்படுகிறது.
இதன் பழங்கள் ஏறத்தாழ முட்டை வடிவத்தில் காணப்படுகின்றன. ஒரு பழத்தின் எடை 50 முதல் 150 கிராம் வரை இருக்கும். குடம்புளி சமையலில் பயன்படுத்தப் படுகிறது. பொதுவாக இது சுவை கூட்டியாக உபயோகிக்கப்படுகிறது என்ற போதிலும், செரிமானத்துக்கும் உதவுகிறது. இதன் பழத் தோலில் இருந்து தயாரிக்கப்படும் சாறு வாதத்திலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது. மேலும் வயிற்று உபாதைகளையும் தணிக்கிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க குடம்புளி உதவுகிறது.
குடம்புளி மரத்தின் பட்டைகளிலிருந்து எடுக்கப்படுகின்ற மஞ்சள் நிறப் பிசின், உடல் தசைகளுக்கு வலிவு அளிக்கிறது. சர்க்கரை நோயின் உக்கிரத்தை தணிக்கக்கூடிய இயல்பு இதற்கு உள்ளது. உலர்ந்த பழத்தின் சதைப்பகுதியானது தங்கம், வெள்ளியை துலக்கி மெருகேற்ற பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ரப்பர் பாலை இறுக்கி கெட்டியாக்குவதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது. கர்நாடகாவிலுள்ள குடகு மாவட்டத்தில் வாழும் பழங்குடியினர் குறிப்பாக மடிகேரி பகுதியில் வசிப்பவர்கள் மலபார் புளியமரத்தில் காய்த்து பழுத்து விழும் கனிகளைப் பயன்படுத்தி கச்சம் புளி என்று கூறப்படும் புளிநீரை தயாரிக்கின்றனர். இது பிளாக் வினிகர் என்றும் அழைக்கப்படுகிறது.
கச்சம்புளி 750 மி.லிட்டர், ரூ. 750 முதல் ரூ. 850 வரை விற்பனையாகிறது. இதற்கான தேவை வெளிமாநிலங்களிலும் அதிகரித்து வருகிறது. இதை தயாரிப்பதில் மடிகேரியில் உள்ள பெண்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்கள் தயாரிக்கும் புளி நீர் மூன்றாண்டுகள் கெட்டுப்போவதில்லை. புளிநீருக்கான தேவை ஏறுமுகமாகவே உள்ளதால் அதை பூர்த்தி செய்யக் கூடியவகையில் உற்பத்தியை உயர்த்த முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து மலபார் புளிய மரங்களை இதர மலைப் பகுதிகளிலும் சாகுபடி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.