சுமைகளும் சுகமாகும்

சென்னையில் நண்பர் ஒருவரின் இல்லத்திற்கு காலையில் சென்றேன். அவர் ஒரு தனியார் கம்பெனியில் ஜெனரல் மேனேஜராக பணியாற்றுகிறார்.

அவரது மனைவி அங்கு ஒரு ஐடி கம்பெனியில் பிராஜக்ட் ஆபீசர். இரண்டு குழந்தைகள். மூத்தவர் நான்காம் வகுப்பு, இரண்டாவது பெண் குழந்தை ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட். வீடு ஒரே பரபரப்பாக இருந்தது. இருவரும் வேலைக்குப் போவதால் அங்கு டென்ஷன் என்பதை நேராக காண முடிந்தது.

காலையில் எழுந்ததுமே அவசர அவசரமாக காலை உணவு தயாரித்து, மதிய உணவிற்கான சாதம் தயாரித்து, பார்சல் செய்து, மகளுக்கு தலை வாரி, அவளை தயார் செய்து, பையனை குளிக்க வைத்து, யூனிஃபார்ம் மாட்டி, புத்தகம், டிபன் பாக்ஸ் ஆகியவற்றை மறக்காமல் பையில் எடுத்து வைத்து, அரக்கப்பரக்க வெளியே ஓடிவந்து, ஸ்கூல் வேன் சத்தம் கேட்டதும், வேகமாக தெருவுக்குச் சென்று அவர்களை பள்ளிக்கு அனுப்பிவிட்டு ஓடிவந்த அவரின் மனைவி, புன்சிரிப்புடன்

என்னை பார்த்து, ‘நீங்க சாப்பிடுங்க’ என்றார். ‘இல்லை அம்மா நான் சாப்பிட்டு விட்டுதான்’ வந்தேன்.’ என்றேன்.

அப்பப்பா… அந்த அம்மா முகத்தில் ஒரு நிம்மதி. நண்பரிடம் வந்த விஷயத்தை சொல்லிவிட்டு, அவருடனேயே பைக்கில் நானும் செல்ல வேண்டிய இடத்திற்கு கிளம்பலாம் என முடிவு செய்தேன். அவசரமாக இருவரும் சாப்பிட்டு விட்டு, மதிய உணவை மறக்காமல் எடுத்துக் கொண்டு அவர் மனைவி வேகவேகமாக டாட்டா காட்டிவிட்டு, பஸ் பிடிப்பதற்காக ஓடிப்போனார். நண்பர் தனது பைக்கில் புறப்பட்டார். நானும் உடன் பயணித்தேன்.இது தினசரி செயலாக வாழ்க்கையில் இருப்
பது. இந்த மாதிரி குடும்பங்களில் தினமும் டென்ஷன்தான். சமூக வாழ்வில் குடும்பம் என்பது முக்கியமானவை. இதை வைத்துதான் வாழ்க்கை அமைகிறது.

கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் பொருளாதார தேவை பூர்த்தி யாகும். ஆனால், மன நிம்மதி என்பது அங்கு இல்லாமல் போகிறது. இருவரும் வேலைக்கு போகும் போது பெண்ணின் சுமை மிக அதிகமாகி விடுகிறது. கணவன் மனைவி இருவரும் பேசிக் கொள்ளவே நேரம் இருக்காது. விளைவு மன இறுக்கம்.. மனஸ்தாபம்.. புரிதல் இல்லாமை.. கோபம்.. தாபம்.. மன கஷ்டம் ஏற்படுகிறது. என் நண்பரிடம் “எப்படி இதை சமாளிக்கிறீர்கள்” என்று கேட்டேன்.

“எங்க இருவருக்கும் நல்ல புரிதலும், அன்பும், உள்ளது. வாரத்தில், புதன், சனி, இரண்டு நாட்களும் நாங்கள் குடும்பத்தோடு சேர்ந்து இரவு உணவு உண்ணுகிறோம். மாதத்தில் ஒரு சனிக்கிழமை குடும்பத்தோடு வெளியே சென்று வருகிறோம். வீட்டில் உள்ளவர்களின் தேவைகளை எதிர்பார்ப்பு இல்லாமல் பூர்த்தி செய்து விடுகிறேன்.

இதனால் எங்கள் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. காலை நேரம் கொஞ்சம் பரபரப்பு இருக்கும் அவ்வளவுதான். மிக மகிழ்ச்சியாக இருக்கிறது எங்கள் வாழ்க்கை. எங்களுக்கு மன இறுக்கமும் இல்லை, சிரமமும் இல்லை” என்றார் என் நண்பர் கூலாக….!