கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தடுப்பூசி செலுத்துவது உட்பட சில ஆலோசனைகளை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான ஹர்ஷ் வர்தன், ”கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, தடுப்பூசி எடுத்துக் கொள்வது சிறந்த பாதுகாப்பு என்று நீங்கள் கூறியுள்ளதை நங்களும் ஏற்கிறோம். மத்திய அரசும் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. ஆனால், உங்கள் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களும் சில மாநில முதல்வர்களும் நம் நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசி குறித்து சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மோடி அரசு அளிக்கும் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டாம் என்றும் கருத்து கூறியுள்ளனர். இதனால், காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வம் மக்களிடம் குறைவாகவே உள்ளது. நீங்கள் கூறும் இந்த ஆலோசனைகள், உங்கள் கட்சியில் உள்ளவர்களுக்கும் தானே!? நீங்கள் வெளிப்படையாக உங்கள் கட்சியினருக்கு கடிதம் எழுத வேண்டாம். குறைந்தபட்சம், தனிப்பட்ட முறையிலாவது அவர்களிடம் கூறலாமே. ஆனால், நீங்கள் அப்படி கூறியிருந்தாலும் அது வீண் முயற்சியாகவே இருந்திருக்கும் என நான் கருதுகிறேன். உங்களுக்கு ஆலோசனை வழங்கியவர்கள், உங்களுக்கும் பொய் தகவல்களை கூறியுள்ளனர் என்பதால் உங்கள் கடிதத்தில் அவை வெளிப்பட்டுள்ளன. இருந்தாலும், உங்கள் நல்ல நோக்கத்தை புரிந்து கொள்கிறோம். அதுபோன்று அரசுக்கும், நமது நாட்டின் மீது நல்ல நோக்கம் உள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்’ என அவர் கூறியுள்ளார்.