ஆட்சியை கலைப்பதில் அரை சதம்

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி பதிலளித்து பேசினார். அப்போது அவர், “சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்தி 90 முறை மாநில ஆட்சியை கலைத்தது யார் தெரியுமா? அதிலும் ஒருவர் மட்டும் 356 சட்டப்பிரிவை பயன்படுத்தி 50 முறைகளுக்கு மேல் மாநில ஆட்சியை கலைத்துள்ளார். அது வேறு யாருமல்ல, இந்திரா காந்தி தான். மாநில ஆட்சியை கலைப்பதில் அரைசதம் அடித்திருப்பவர் இந்திரா காந்தி. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சியை கவிழ்த்தது இந்திரா காந்தி. அந்த இந்திரா காந்தியின் கட்சியுடன் தான் தி.மு.கவினர் கூட்டணி வைத்துள்ளீர்கள். அதுமட்டுமல்ல, எம்.ஜி.ஆர் ஆட்சியையும் காங்கிரஸ் கட்சி கலைத்துள்ளது. அதேபோல, எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் சரத் பவார், முதலமைச்சராக இருந்த போது, அவரின் ஆட்சியையும் கலைத்ததும் இதே காங்கிரஸ் தான். ஆந்திராவில் என்.டி.ராமராவ் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்தபோது நீங்கள் அனைவரும் அவரது அரசை வீழ்த்த முயற்சித்தீர்கள். இப்போது ஏராளமான கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கின்றன. ஆனால் ஒரு காலத்தில் அந்த கட்சிகளின் மாநில அரசுகளை கலைத்தது இந்த காங்கிரஸ் தான். சிறுபான்மையினரை, குறிப்பாக முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் ‘சிகுலரிசத்தை’ அகற்றுவதற்கான நேரம் இது. சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் பாரபட்சமின்றி சென்றடையும் வகையில் புதிய பணி கலாச்சாரத்தை எனது அரசு உருவாக்கியுள்ளது. இந்தப் புதிய கலாச்சாரமே உண்மையான மதச்சார்பின்மை. காங்கிரஸ் தடைகளை உருவாக்கி திட்டங்களைத் தாமதப்படுத்த மட்டுமே முயற்சிக்கிறது. சுதந்திரத்தின் அமிர்த கலத்தில் நிறைவு என்பதைத் தேர்ந்தெடுத்துள்ளோம். ஒவ்வொரு பயனாளியும் எப்படி இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியுள்ளோம். சமூகத் திட்டங்களின் 100 சதவிகிதப் பலனை இடையூறு இல்லாமல் அவர்கள் பெறலாம். ‘சப்கா சாத் சப்கா விகாஸ்’ என்ற எனது அரசின் மந்திரம், மக்களின் உரிமைகள் எந்தத் தடையுமின்றி அவர்களைச் சென்றடைவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பல சிறிய நாடுகள் கூட வெற்றியின் உச்சத்தைத் தொட்டபோது காங்கிரஸின் ஆட்சி காலத்தில் நாடு 60 ஆண்டுகளை வீணடித்துவிட்டது” என்று விமர்சித்தார்.