கர்நாடகாவில் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக ஹிந்துக்கள் ஹலால் இறைச்சியை வாங்குவதைப் புறக்கணிக்க வேண்டும் என்று சில தன்னிச்சையான பிரச்சாரங்கள் முன்வைக்கப்படுகின்றன. யுகாதி புத்தாண்டுக்குப் பின்னர் அனைவரும் ஹலால் இறைச்சியை முற்றிலுமாக புறக்கணிக்குமாறு கோரிக்கைகள், முன்வைக்கப்பட்டுள்ளன. யுகாதிக்கு மறுநாள் ஹிந்துக்களின் ஒரு பிரிவினர் தங்களின் தெய்வங்களுக்கு இறைச்சியைப் படையலாகப் போடும் பழக்கம் கர்நாடகாவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த பா.ஜ.க தேசியச் செயலாளர் சி.டி.ரவி, “ஹலால் இறைச்சி என்பது முஸ்லிம்களின் பொருளாதார ஜிஹாத். இது முஸ்லிம்கள் தங்கள் மக்கள் மற்ற மதத்தினவரிடம் இறைச்சி வாங்கக் கூடாது என்பதற்காக வகுத்த கொள்கை. அவர்கள் ஹலால் இறைச்சி மட்டும்தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்று நினைக்கும்போது, ஹலால் இறைச்சி பயன்படுத்த வேண்டாம் என்று மற்றொரு தரப்பு நினைப்பதில் என்ன தவறு? அவர்களின் இறைவனுக்கு ஹலால் இறைச்சி உகந்ததாக இருக்கலாம். ஆனால் ஹிந்துக்களுக்கு அது உகந்தது அல்ல. ஹிந்துக்களிடம் முஸ்லிம்கள் இறைச்சி வாங்கமாட்டார்கள் என்றால், ஹிந்துக்களையும் முஸ்லிம்களிடம் இறைச்சி வாங்க வற்புறுத்தக் கூடாது. வணிகம் என்பது ஒருவழி போக்குவரத்து அல்ல, அது இருவழிப் போக்குவரத்தையும் அனுமதிப்பது” என்று கூறினார்.