குஜ்ஜார், பேக்கர்வால்கள் நன்றி

ஜம்மு காஷ்மீரில் புதிய சட்டமன்றம் உருவாக்கு அமைக்கப்பட்ட தொகுதிகள் மறு சீரமைப்புக்கான டீலிமிட்டேஷன் கமிஷன், ஏழு புதிய சட்டமன்றத் தொகுதிகள் உருவாக்க பரிந்துரைத்தது. மேலும், முதன் முதலாக ரிசர்வ் தொகுதி அடிப்படையில், 9 பட்டியலினத்தவர் தொகுதிகளும் 7 பழங்குடியினத் தொகுதிகளும் உருவாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்க ஜம்மு காஷ்மீரின் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த குஜ்ஜார், பேக்கர்வால் சமூகத்தினர் டெல்லிக்கு வந்தனர். இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார் கூறுகையில், ‘ஜம்மு காஷ்மீரில் குஜ்ஜார் பேக்கர்வால் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் வசிக்கின்றனர். அவர்களுக்கு பல ஆண்டுகளாக பல கோரிக்கைகள் உள்ளன. எங்களின் பிரச்சனைகளை எந்த அரசும் கண்டுகொள்ளவில்லை. பிரதமர் மோடி எங்களின் அனைத்து கோரிக்கைகளையும் கேட்டு வன உரிமைகள் மற்றும் இடஒதுக்கீட்டை வழங்கினார். அதனால்தான் இன்று எங்களின் பிரதிநிதிகள் பிரதமரை சந்திக்க டெல்லி வந்தனர்’ என்றார். ஜம்மு காஷ்மீர் கட்சியின் இணைப் பொறுப்பாளர் ஆஷிஷ் சூட் ‘இதனால் ஜம்மு காஷ்மீர் முழுவதும் மகிழ்ச்சி நிலவுகிறது” என்றார். குப்வாராவில் வசிக்கும் சவுத்ரி சலாமுதீன், “மோடி ஜி எங்களுக்கு ஒரு பெரிய உதவி செய்துள்ளார். இந்த அரசுக்கு நாங்கள் எப்போதும் ஆதரவளிப்போம்” என்றார். அகில இந்திய குஜ்ஜார் மகாசபா மாநில தலைவர் சர்தார் கான், ‘முன்பு 47 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் பயங்கரவாதத்தை அனுமதித்தனர். எங்களை அடக்கி ஒடுக்கி வந்தனர். ஆனால் தற்போது மோடியின் அரசு எங்களுக்கு நன்மை செய்துள்ளதை நினைத்து மகிழ்கிறோம்’ என்றார்.