குஜராத் மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காந்திநகர் மாநகராட்சியுடன் சேர்த்து மூன்று நகராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அதனுடன், காலியாக உள்ள 104 வார்டுகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், காந்திநகர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 44 வார்டுகளில் 41 வார்டுகளை கைப்பற்றி பா.ஜ.க அமோக வெற்றி பெற்றதையடுத்து காந்திநகர் மாநகராட்சியை பா.ஜ.க தக்க வைத்துக்கொண்டது. இதேபோல ஒகா, தாரா ஆகிய நகராட்சிகளையும் பா.ஜ.க மீண்டும் கைப்பற்றியது. பான்வத் நகராட்சியை பா.ஜ.கவிடம் இருந்து காங்கிரஸ் கைப்பற்றியது. இந்த தேர்தல் வெற்றியின் மூலம் அடுத்து வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க பா.ஜ.க புதுத்தெம்புடன் தயாராகி வருகிறது. இது குறித்து கருத்துத் தெரிவித்த குஜராத் முதல்வரும், பா.ஜ.க மூத்த தலைவருமான பூபேந்திர படேல், ‘தேர்தலில் பா.ஜ.கவுக்கு வெற்றி தேடித் தந்த மக்களுக்கு நன்றி. குஜராத் மக்கள் என்றுமே பிரதமர் மோடியின் பக்கம்தான் என்பதை இந்த வெற்றி மீண்டும் நிரூபித்துள்ளது. கொரோனா காலத்திலும் பா.ஜ.கவினர் மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர்’ என கூறினார்.