கேரளாவின் பாலக்காட்டில் உள்ள மாத்துார் கிராம பஞ்சாயத்தில் சமீபத்தில் புதிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு, கம்யூனிஸ்ட் மற்றும் பா.ஜ.க உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு அளித்துள்ளனர். அத்தீர்மானத்தின்படி இனி பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளை மக்கள், ‘சார், மேடம்’ என, அழைக்கத் தேவையில்லை. அவர்களை பெயரைச் சொல்லியோ, பதவியைச் சொல்லியோ அழைக்கலாம். வயதில் மூத்தவராக இருந்தால், ‘சேட்டன், சேச்சி’ என அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே இது போன்ற ஒரு முன்மாதிரி தீர்மானத்தை நிறைவேற்றியுள்ள முதல் பஞ்சாயத்து இது. மேலும், ஜனநாயகத்தில் மக்களே எஜமான்கள். மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அவர்களுக்கு சேவை புரிபவர்கள். அதனால் இனி மக்கள் கோரிக்கையுடன் அல்ல, அவர்களின் உரிமையை கேட்டு வர வேண்டும். எனவே, சேவைக்கான படிவங்கள் இனி உரிமை படிவம் என்றே இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.