ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ‘புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் நிலம் பறிபோகாது. இதுவரை ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் சிறு விவசாயிகளுக்கு உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களில் திருத்தம் தேவை என அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் பேசியதை தான் நாங்கள் செய்திருக்கிறோம். விவசாயிகளுடன் பேச தயார். பிரச்னைகளை கூட்டாக விவாதித்து தீர்வு காண வேண்டும். வேளாண் சட்டங்களை எதிர்ப்போர் கூறும் வாதங்களில் எந்த சாரமும் இல்லை. உலக நாடுகளின் பார்வை பாரதத்தின் மீது திரும்பியுள்ளது. நம் தேசத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பாரதத்தில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. முன்பின் தெரியாத ஒரு எதிரியான கொரோனாவை தேசம் சந்திக்க வேண்டியிருந்தது. கொரோனாவுக்கான விளக்கேற்றும் நிகழ்வை சிலர் கிண்டல் செய்தனர். ஏழைகள்கூட வீடுகளில் விளக்குகளை ஏற்றினார்கள். பாரதத்தில் 10 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து பாரதத்திற்கு கிடைக்குமா, எத்தனை பேருக்கு கிடைக்கும் என்றெல்லாம் யாருக்கும் தெரியாது. ஆனால் தற்போது நம் நாடு சொந்தமாக தடுப்பூசி கண்டறிந்து உலகத்திற்கு வழங்குகிறது. ‘இது நமது தன்னம்பிக்கை வளர்த்துள்ளது’ என்று பேசினார்.