பாரதத்தின் புதிய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து, வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்த அவரது டுவிட்டர் பதிவில், “திருமதி திரௌபதி முர்மு அவர்களை சந்தித்து, வாழ்த்து தெரிவித்தேன்” என்று பதிவிட்டுள்ளார். மேலும், “பாரதம் வரலாறு படைத்துள்ளது. விடுதலையின் அமிர்த பெருவிழாவை 1.3 பில்லியன் பாரத மக்கள் கொண்டாடி வரும் வேளையில், பாரதத்தின் கிழக்கில் உள்ள தொலைதூர பகுதியில் பிறந்த பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒரு பாரதத் திருமகள் ஒருவர் நமது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த சாதனையைப் புரிந்த திரௌபதி முர்முவுக்கு வாழ்த்துகள். அவரின் வாழ்க்கை, தொடக்க கால போராட்டங்கள், வளமான சேவை, தலைசிறந்த வெற்றி ஆகியவை ஒவ்வொரு குடிமகனுக்கும் ஊக்கமளிக்கிறது. நம் குடிமக்களுக்கு, குறிப்பாக ஏழைகள், விளிம்பு நிலையில் உள்ள மற்றும் பின்தங்கிய பிரிவினரின் நம்பிக்கையாக அவர் உருவெடுத்துள்ளார். சிறந்த சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். ஜார்க்கண்ட் ஆளுநராக அவரது பதவிக்காலம் மிகவும் பாராட்டத்தக்கது. பாரதத்தின் வளர்ச்சிப் பாதையை வலுப்படுத்தி, மிகச்சிறந்த குடியரசுத் தலைவராக நாட்டை முன்னெடுத்துச் செல்வார் என்று நான் நம்புகிறேன். கட்சி வேறுபாடின்றி, திரௌபதி முர்முவுக்கு ஆதரவளித்த அனைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரது வெற்றி நம் ஜனநாயகத்திற்கு வலு சேர்த்துள்ளது” என வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.