கூகுள் பே நீதிமன்றம் நோட்டீஸ்

அபிஜித் மிஸ்ரா என்பவர் தாக்கல் செய்த பொது நல வழக்கில், ‘இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவை மீறும் விதமாக கூகுள் பே செயல்படுகிறது. கூகுளின் பாரத குடிமக்களின் ஆதார், வங்கி தகவல்களின் மீது, அங்கீகரிக்கப்படாத அணுகல், பயன்பாடு, தகவல் சேமிப்பு உள்ளிட்டவை கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும். மத்திய அரசின் ஆதார் சட்டம், வங்கி ஒழுங்குமுறை சட்டம், பணப்பரிமாற்ற சட்டம் உள்ளிட்டவை அப்பட்டமாக மீறப்படுகின்றன’ என தெரிவித்தார். வங்கிச் சட்டங்களின் கீழ் அங்கீகரிக்கப்படாத செயல்பாடுகள் குறித்த கூகுள் பேவுக்கு எதிரான இந்த மனு மீது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ), ரிசர்வ் வங்கி, கூகுள் இந்தியா டிஜிட்டல் சர்வீசஸ் நிறுவனம் உள்ளிட்டவை பதில் அளிக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கை நவம்பர் 8ம் தேதி விசாரணைக்கு நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.