விரைவில் நல்ல முடிவு

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்க முடியாது. அ.தி.மு.க என்பது ஒரு பெரிய கட்சி. எந்த ஒரு பாகுபாடுமின்றி காங்கிரஸ், தி.மு.க வேட்பாளரை தோற்கடிக்கக்கூடிய வேட்பாளரை நிறுத்த வேண்டும். அ.தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற அனைத்து வகையான ஆதரவையும் தர வேண்டியது எங்களது கடமை. பா.ஜ.க தொண்டர்கள், அங்கு பா.ஜ.க நிற்க வேண்டும் என்றால் கூட, நம்முடைய பலம் என்ன என்பது நமக்கு தெரியும். வாக்குகள் பிரியும்போது என்ன நடக்கும் என்பதும் எங்களுக்குத் தெரியும். கூட்டணியில் உள்ள பல தலைவர்கள் ஆலோசனை நடத்தயுள்ளனர். அனைத்திற்கும் நேரம், காலம் உள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். அங்கு நிற்கும் கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற அனைத்து விதமான அஸ்திரங்களையும் கொடுக்க வேண்டியது எங்களது கடமை. காங்கிரஸ் கட்சியில் ஏகப்பட்ட உட்கட்சி பிரச்சனைகள் உள்ளன. ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் பேச்சுகளை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளனர். அரசியல் காரணங்களுக்காக பா.ஜ.கவை அவர் குறை கூறலாம். ஆனால், அவருடைய கட்சியின் ஈரோடு மாவட்டத் தலைவரே கூட முழுமையாக அவரின் பின்னால் நிற்பாரா என்பது சந்தேகம் தான். அப்படி இருக்கும் சூழ்நிலையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றக் கட்சியை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?” என்று கூறினார்.