ஆண்டில் 365 நாட்களும் தண்ணீர் வரத்து சாத்தியமாக இருக்க வேண்டும்; விவசாயிகளுக்கு பாசனத்துக்கேற்ற நீர் கிடைத்து முப்போகம் விளைய வேண்டும்; ஆடு, மாடுகள் குடிக்கும் நீர், தேவைக்கும்அதிகமாகக் கிடைக்க வேண்டும். “இப்படியெல்லாம் நீர்வரத்து எங்கே இருக்கிறது? அங்கே எனக்கொரு காணி நிலமாவது வாங்கிவிட வேண்டும்” என்கிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள். இந்த நிலை நம் தமிழகத்திலேயே வெகு விரைவில் சாத்தியமாக இருக்கிறது. மேட்டூர் அணையில் நீர் திறந்துவிட்டாலும், பாசனத்துக்காக ஏங்கி நிற்கும் காவிரியின் கடைமடைப் பகுதி நிலங்கள் இனிவரும் காலங்களில் புது பொலிவுப் பெறவிருக்கின்றன. தேவையான நீர்வளத்தைப் பெற இனி கொடி பிடிக்க வேண்டியதில்லை.
ஆம், கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தை விரைவில் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வழித்தடங்களை ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, தமிழகம் ஆகிய மாநில அரசுகள் உறுதி செய்ததும், இந்தத் திட்டத்துக்கான பணிகள் தொடங்கும். பணிகள் நிறைவடைந்தால் காவிரி டெல்டா மாவட்டங்களின் கடைமடை மாவட்டங்கள் வரை நீர்ப்பாசனம் கிடைக்கும். அது மட்டுமல்ல, வடக்கில் இருந்து தெற்குநோக்கி நீர் பாய்வதால் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் போன்ற மாவட்டங்களும் செழுமையாகும்.
இத்தகைய நதிநீர் இணைப்புத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான யோசனை, கடந்த 1980ல் தொடங்கியது. நதியில் இருந்து கடலுக்குச் சென்று வீணாகும் உபரிநீரை திசை மாற்றி, நீர் பாய்ந்திடாத பகுதிகளுக்குத் திருப்பி விடும் வழியை ஆராய மத்திய நீர்ப்பாசனத் துறை முடிவு செய்தது.இதன்படி, தேசிய நீர் மேம் பாட்டு ஆணையத்தின் தேசியமுன்னோக்கு திட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள 30 நதிகளை இணைக்கும் சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டன. இமய மலையில் தோன்றி வட மாநிலங்களில் ஓடும் 16 நதிகளும், தென் மாநிலங்களில் ஓடும் 14 நதிகளும் இதில் இடம்பெற்றன. பிறகு பல ஆண்டுகளாக தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம் குறித்த குரல்கள் ஆங்காங்கு ஒலித்தனவே தவிர, அவை வலு பெறவில்லை. வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில் நதிநீர் இணைப்புத் திட்டம் குறித்த யோசனைகள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டன.
ஆனால், மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அவற்றை கிடப்பில் போட்டது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2014ம் ஆண்டில் பதவியேற்றது. அதே ஆண்டு செப்டம்பரில் நதிநீர் இணைப்பு குறித்து ஆராய சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுக்கள் இதுவரை 18 முறை கூடி நதிநீர் இணைப்பு குறித்த திட்டங்களைப் பரிசீலனை செய்தன. மேலும், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2015 ஏப்ரல் மாதம் பணிக் குழுக்களை அமைத்தது மத்திய ஜலசக்தி அமைச்சகம். இதன் தொடர்ச்சியாக, கோதாவரி – – காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்ட மானது, கோதாவரி நதி முதல் கிருஷ்ணா நதிப் பாதையில் அமைந்துள்ள நாகார்ஜுன சாகர் அணை வரையிலும், அந்த இடத்தில் இருந்து பெண்ணாற்றில் அமைந்திருக்கும் சோமசிலா அணை வரையிலும், அங்கிருந்து காவிரி நதி பாயும் கல்லணை வரையிலும் என மூன்று இணைப்புகளாக அமையப் பெறும்.
இது குறித்த வரைவு அறிக்கையை, கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆந்திர பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநில அரசுகளுக்கு மத்திய ஜலசக்தி துறை அனுப்பியது. அதன் தொடர்ச்சியாக 2020 செப்டம்பர் 18-ம் தேதி, காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டன. மேலும், இந்தத் திட்டத்தை இரண்டு நிலைகளாக அமல்படுத்த ஆலோசிக்கப்பட்டது. முதல் நிலையில், கோதாவரி படுகையின் தேவையை முழுவதுமாக கணக்கில் கொண்டு மீதமுள்ள உபரிநீரை காவிரியுடன் இணைப்பது முதல் கட்டம். பிரம்மபுத்ரா, கங்கை, மகாநதி, கோதாவரி நதிகளை இணைப்பது இரண்டாம் கட்டம். இரண்டாம் கட்டம் நிறைவடையும்போது முதல் கட்டத்துக்குத் தேவையான நீர்வளத்தை மேம்படுத்த முடியும். தற்போது, முதல் நிலையின் அடிப்படையிலேயே வரைவு அறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு பரி சீலிக்கும் சமயத்தில் கடை மடை நீரை கல்லணையில் விடுவதற்குப் பதிலாக, மேட்டுப் பகுதியான கரூர் மாவட்டம் மாயனூரில் உள்ள கட்டளை தடுப்பணைக்குச் செலுத்த வேண்டும் என்று தமிழக விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதாவது, பாலாறு கடந்து, மாமண்டூர் நீர்த்தேக்கத்தில் இருந்து உந்துவிசை மோட்டார் மூலமாக கட்டளை தடுப்பணைக்கு இணைக்க வேண்டும் என்ற இந்தக்கோரிக்கை தொழில்நுட்ப, பொருளாதார சாத்தியக் கூறுகளின் அடிப்படையில் பரிசீலனையில் உள்ளது. இவ்வாறு கட்டளை தடுப்பணைக்கு வந்து சேர்வதால், தென் தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களும் பயன் பெறும்.
மேலும், பூண்டி நீர்த்தேக்க நிலையை ஆரணியாறு நீர்த்தேக்க நிலையோடு 609 குளங்கள் வாயிலாக இணைத்தால் மேலும் 15 டிஎம்சி நீரை சேமிக்க முடியும் என்று ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நிலையை உறுதிபடுத்திய பின் இதுகுறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. இரண்டாம் நிலையையும் நடைமுறைப் படுத்தினால் தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 200 டிஎம்சி நீர் கிடைக்கும். முதல் நிலையில் 247 டிஎம்சி நீரை மட்டும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது தெலங்கானாவுக்கு 65.80டிஎம்சி, ஆந்திரத்துக்கு 79.92 டிஎம்சி, தமிழகத்துக்கு 84.28 டிஎம்சி என பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜூன் 10ம் தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரையிலான 143 நாட்களில் 247 டிஎம்சி நீரை தேக்கி வைக்க முடியும் என்று ஆராயப்பட்டுள்ளது.
கோதாவரி–-காவிரி இணைப்புத் திட்டத்தின் மொத்த நீளம் 1,211 கிலோ மீட்டர். தெலங்கானாவின் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள இச்சம்பள்ளி என்ற இடத்திலிருந்து இந்தத் திட்டம் தொடங்கும் என்று மத்திய ஜலசக்தித் துறை இணையமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா கடந்த மார்ச் 18ம் தேதி நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார். கோதாவரி- – காவிரி இணைப்புத் திட்டத்துக்கு ரூ.86,000 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 90 சதவீத தொகையை மத்திய அரசும், 10 சதவீதத்தை மூன்று மாநில அரசுகளும் வழங்கும். மாநில அரசுகள் திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புதல் அளித்ததும் அதற்கான பணிகள் தொடங்கும். கோதாவரி-–காவிரி இணைப்பின் தொடர்ச்சியாக காவிரி- – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டமும் பரிசீலனையில்உள்ளது. இந்தத் திட்டம் அமல்படுத்தப் பட்டால், நீர்ப்பாசனத்துக்காக ஏங்கி நிற்கும் தமிழக விவசாய நிலங்கள் எதிர் காலத்தில் செழுமைமிக்க பூமியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
இராம. பாலசுந்தரம்
(கட்டுரையாளர்: மாநில செயலாளர், பாரதிய கிசான் சங்கம்)