ரவீந்திர நாத் தாகூர், ஒருநாள் மதியம், தான் நடத்திவந்த பள்ளியின் அருகில் உணவருந்திவிட்டு வெளியே சென்றுகொண்டிருந்தார். அவருடன் சில வெளிநாட்டு விருந்தினர்களும் இருந்தனர். அவர் தபால் நிலையத்தைக் கடக்கும் போது, ஒருவர் ஒரு கடிதத்தை அவரிடம் கொடுத்தார். அதனை வாங்கி தனது பையில் வைத்துக்கொண்டார். அருகில் இருந்தவர் தாகூரை, கடிதத்தை படிக்கத் தூண்டினார். தாகூர் அதனை படித்தபோது, அதில் அவர் எழுதிய `கீதாஞ்சலி‘ படைப்புக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்திருந்தது. ஆம், 1912-ல் ஆங்கிலத்தில் 103 பாடல்களுடன் வெளியான அவருடைய கீதாஞ்சலி தொகுப்புக்கு 1913ல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
ஐரோப்பாவைத் தவிர்த்து நோபல் பரிசு பெற்ற முதல் மனிதர் இவர். ஏன், ஆசியாவிலேயே முதன்முதலில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமையும், பாரதத்தில் இதுவரை இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற ஒரே மனிதர் என்ற பெருமையும் இவரையே சாரும். பாரத தேசத்தின் தேசிய கீதம் மட்டுமல்லாது வங்க தேசத்தின் தேசிய கீதமும் இவர் எழுதியதுதான்.
பல இலக்கியவாதிகளும் தாகூரின் சிறுகதைகளை வியந்து பாராட்டிக்கொண்டிருந்த வேளையில், தாகூர் தன்னை கவிஞராக அழைப்பதையே விரும்பினார்.
கல்வி முறையில் ஏதேனும் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று பெரிதும் விரும்பினார். அந்த கனவின் வெளிப்பாடுதான் அவர் தொடங்கிய `சாந்திநிகேதன்’ கல்வி நிலையம். இங்கு வெளிநாட்டவரும்கூட தங்கிப் படிக்கும் வகையிலான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். தனது வருவாயின் பெரும்பகுதியை இதற்காகவே செலவழித்தார். தாய்மொழி வழிக்கல்வி இன்றியமையாததாகக் கருதியவர் தாகூர்.
குழந்தைகளின் கல்விக்கும், பெண் கல்விக்கும் அதிக முக்கியத்துவத்தை அன்றைய காலகட்டத்திலேயே வழங்கினார். குழந்தை மனப்பான்மையுடன் இருந்தால்தான் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க முடியும் என்று நம்பினார். இந்த சாந்தி நிகேதன் கல்வி நிலையம்தான் தற்போது விஷ்வ பாரதியாக வளர்ந்து நிற்கின்றது.
மகாகவி பாரதியார், `கீர்த்தியடைந்தால் மஹான் ரவீந்திரரைப் போல கீர்த்தியடைய வேண்டும். வங்காளத்தில் மாத்திரமா? இந்தியா முழுமையுமா? ஆசியா முழுதுமா? ஜெர்மனி, ஆஸ்திரியா, பிரான்ஸ் பூமண்டல முழுமையும் பரவின கீர்த்தி. இத்தனைக்கும் அவர் பாடிய பாட்டுகளோ வங்க பாஷையிலே உள்ளன. மொழி பெயர்ப்புகளைத்தான் உலகம் பார்த்திருக்கிறது. அதற்குத்தான் இந்தக் கீர்த்தி’ என்று புகழ்ந்துள்ளார்.
ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த தினம் இன்று
எஸ். கோகுல்