உற்பத்தி பொருட்களுக்கும் வேளாண் விளை பொருட்களுக்கும் கலைப் படைப்புகளுக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. இக்குறியீட்டைப் பெற்றால் சம்பந்தப்பட்ட பொருளை சுலபமாக லாபகரமாக சந்தைப்படுத்த முடியும். இதனால்தான் புவிசார் குறியீடு கோரி அதிக அளவில் விண்ணப்பங்கள் வரத்தொடங்கியுள்ளன.
மண்ணின் தன்மை, நீர்வளம், மழைப் பொழிவு காற்றின் வேகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாய விளைபொருளுக்கு தனித்தன்மை கிடைக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு வேளாண் விளை பொருளுக்கு வழங்கப்படும் அங்கீகாரமாகவே புவிசார் குறியீடு கருதப்படுகிறது. நம் மாநிலத்தில் தென்கோடியில் உள்ள ஈத்தாமொழியில் விளையும் தேங்காய் ஈரோடு பகுதியில் விளையும் மஞ்சள், மணம் பரப்பி மக்களை மயக்கும் மதுரை மல்லிகை, விருப்பாட்சி மலை வாழைப்பழம், சிறுமலை வாழைப்பழம் உள்ளிட்டவற்றிற்கு ஏற்கனவே புவிசார் குறியீடு அளிக்கப்பட்டுள்ளது. இப்பின்னணியில் சேலம் மாங்கனி, கம்பம் பன்னீர் திராட்சை, ஒடுக்கத்தூர் கொய்யா, உள்ளிட்டவற்றுக்கு புவிசார் குறியீடு அளிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை உன்னிப்பாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இயற்கை விவசாய முறையில் சாகுபடி செய்யப்படும் இலவம்பாடி முள்ளுக்கத்தரிக்காய்க்கு புவிசார் குறியீடு வழங்கவேண்டும் என்று கோரி அண்மையில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கத்தரிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதில் வைட்டமின் சி, இரும்புச்சத்து உள்ளிட்டவை மிகுந்துள்ளன. சளி, இருமலைத் தணிக்கவும் நரம்புகளுக்குத் தெம்பூட்டவும் கத்தரிக்காயிலுள்ள சத்துகள் உதவுகின்றன. உடல் பருமனைக் குறைக்கவும் கத்தரிக்காய் உதவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் இது உறுதுணையாக உள்ளது. கத்தரிக்காயை பிஞ்சாக பயன்படுத்துவதே நல்லது. உடம்பில் சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்தரிக்காயை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இதனால் தோலில் அரிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஒவ்வாமை உடையவர்கள் இதை உபயோகிப்பதை தவிர்க்கவேண்டும்.
வேலூரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் முள்ளுக்கத்தரிக்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது. இலவம்பாடி முள்ளுக்கத்தரிக்காய், குண்டுக்கத்தரிக்காய் என்றும் குறிப்பிடப்படுகிறது. ஊதா நிறத்திலும் இளம்பச்சை நிறத்திலும் கத்தரிக்காய்கள் கொத்துக்கொத்தாகத் தொங்குவது கண்ணுக்கு விருந்தாக அமைகிறது. சாம்பார், புளிக்குழம்பு, காரக்குழம்பு, கூட்டு, பொரியல், வற்றல், வடகம் என பல்வேறு வழிகளில் முள்ளுக்கத்தரிக்காய் பயன்படுத்தப்படுகிறது. சைவ உணவுகளில் மட்டுமல்லாமல் அசைவ உணவுகளுக்கான துணை பதார்த்தமாகவும் கத்தரிக்காய் தொக்கு உபயோகிக்கப்படுகிறது.
இலவம்பாடி முள்ளுக்கத்தரிக்காய் நடவு செய்த 6வது அல்லது 7 வது வாரத்திலிருந்து விளைச்சல் கொடுக்கக்கூடியது. ஆறு மாதங்கள் முதல் பத்து மாதங்கள் வரை பராமரிப்புக்கு ஏற்ப காய் பறிக்கமுடியும். வாரந்தோறும் மூன்று தடவை முள்ளுக்கத்தரிக்காயை பறிக்கலாம். நம் மாநிலத்திலுள்ள வெளியூர்களுக்கு மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களுக்கும் முள்ளுக்கத்தரிக்காய் அனுப்பி வைக்கப்படுகிறது.