பொது சிவில் சட்டம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், “இந்திய அரசியலமைப்பு சாசனம் பொது சிவில் சட்டத்தை பரிந்துரைக்கிறது. மதச்சார்பற்ற நாடான பாரதத்தில் மதரீதியாக சட்டங்கள் இருக்கக்கூடாது. நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் இயற்றப்படும் சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். பா.ஜ.கவை தவிர வேறு எந்த கட்சியும் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக இல்லை. எனவே ஜனநாயகரீதியில் ஆக்கப்பூர்வமான விவாதம், ஆலோசனைகளை நடத்திய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. விவாதம், ஆலோசனைகள் நிறைவு பெற்ற பிறகு பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும்” என்றார். மேலும், “பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை கடந்து தற்போது பாரதம் உயர்ந்த நிலையை எட்டியுள்ளது. இப்போது நாம் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். இது பின்னோக்கி பார்ப்பதற்கான நேரம் அல்ல. முன்னோக்கி பார்க்க வேண்டும். வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி செல்ல வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் 100வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். அப்போது உலகின் மிகப்பெரிய சக்தியாக பாரதம் உருவெடுக்கும். மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் 8 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு உள்ளன. ஊழல் ஒழிக்கப்பட்டு உள்ளது. நாடு வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது. முதலீட்டுக்கு ஏற்ற சூழல் நிலவுகிறது. பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டு அமைதி நிலை நாட்டப்பட்டுள்ளது. சர்வதேச பொருளாதாரத்தில் 5வது பெரிய நாடாக முன்னேறியுள்ளோம். உலகின் முதலீட்டு சந்தையாக மட்டுமல்லாமல் உலகின் உற்பத்தி மையமாகவும் பாரதம் உருவெடுத்து வருகிறது. 2047க்குள் வளர்ந்த நாடாக பாரதம் உருவெடுக்கும். சர்வதேச பொருளாதாரத்தில் தேக்க நிலை நீடிக்கும்போதும் பாரதத்தின் பொருளாதாரம் வேகமாக வளரும் என்று சர்வதேச செலாவணி நிதியம் கணித்துள்ளது” என கூறினார்.