விநாயகர் சிலை இட மாற்றம்; காரணம் கேட்கிறது பா.ஜ.,

புதுக்கோட்டை கலெக்டர் முகாம் அலுவலக நுழைவாயிலின் ஒரு பகுதியில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக விநாயகர் சிலை உள்ளது.

அங்குள்ளவர்கள் சிலைக்கு பூஜை செய்து வழிபட்டு வந்தனர். புதுக்கோட்டை கலெக்டராக மெர்ஸி ரம்யா, மே, 22ல் பொறுப்பேற்ற பின், இந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டதாக சமூக வலை தளங்களில் தகவல் பரவியது.

பா.ஜ., போன்ற ஹிந்து இயக்கங்கள், விநாயகர் நிலை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியதால், ‘சிலை அகற்றப்படவில்லை’ என, கலெக்டர் அலுவலக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பா.ஜ., புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன் வெளியிட்ட அறிக்கை:

புதுக்கோட்டை கலெக்டர் முகாம் அலுவலக வளாகத்தில் இருந்த விநாயகர் விக்ரஹம் இடமாற்றம் செய்யப்பட்டு, விநாயகர் வீற்றிருந்த மரத்திலான மண்டபம், தற்போது திறந்தவெளி தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது.

வழிபாடு நடத்தும் தெய்வ சிலைகளை, அவ்வப்போது மாற்றி அமைப்பது, வழிபாட்டு முறைக்கு உகந்ததல்ல. விநாயகர் சிலையை இடம் மாற்ற வேண்டிய முறையான காரணத்தை தெரியப்படுத்த வேண்டும்.

முறையான காரணங்கள் இல்லாத சூழலில், முன்னதாக இருந்த இடத்தில் மீண்டும் விநாயகரை ஸ்தாபிக்க வேண்டும். விநாயகர் சிலையை புதிய இடத்தில் மாற்ற வேண்டிய நியாயமான காரணங்கள் இருப்பின், ஆகம விதிகளை பின்பற்றி, பலி பீடத்துடன் முறையாக பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

ஹிந்து மதத்தினரின் மத நம்பிக்கையை புண்படுத்தும் முறையற்ற செயல்களை, அரசு செய்யக் கூடாது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.