காங்கிரஸ் கட்சிக்கு பஞ்சாபில் தொடரும் நெருக்கடி, சத்தீஸ்கர் உட்கட்சிக் குழப்பம், ராஜஸ்தான் கட்சிபூசல்களுக்கு மத்தியில், சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி கேரளாவில் மற்றொரு நெருக்கடியை சந்தித்து வருகிறது.
கேரள காங்கிரசில் 52 வருட காலம் பணியாற்றிய கட்சியின் மூத்த உறுப்பினரும், முன்னாள் வயநாடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி (கே.பி.சி.சி) உறுப்பினருமான பாலச்சந்திரன், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகினார். இது குறித்த அவரது அறிக்கையில், காங்கிரஸ் கட்சி தனது திசையை மறந்து பயணிக்கிறது. பெரும்பான்மை, சிறுபான்மை சமூகங்கள் காங்கிரசிலிருந்து விலகிச் செல்கின்றன. திசையை இழந்த ஒரு கட்சியுடன் மக்கள் நிற்க மாட்டார்கள். மக்கள் பிரச்சினைகளில் சரியான நிலைப்பாட்டை எடுக்க கட்சித் தலைமை தவறிவிட்டது. கட்சித் தொண்டர்களின் ஆர்வத்திற்கு ஏற்ப கட்சி செயல்பட முடியவில்லை எனறு குற்றம் சாட்டினார்.
முன்னதாக, இதேபோல கேரள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜி. ரத்திகுமார், கே.பி.சி.சி பொதுச் செயலாளர் கே.பி. அனில் குமார் காங்கிரசை விட்டு வெளியேறி சி.பி.ஐ.எம்மில் இணைந்தனர். மகளிர் காங்கிரஸ் திருவனந்தபுரம் மாவட்ட செயலாளர் ரேஷ்மியும், கட்சித்தலைமை மீது குற்றம் சாட்டியதால் காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்ட பி.எஸ் பிரசாந்தும் கூட சி.பி.ஐ.எம்மில் ஐக்கியமாகியுள்ளனர்.