மத்தியப் பிரதேசத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவதற்காக, பிஷப் டாக்டர் அஜய் லால் என்பவர் ஒரு பட்டியலின குடும்பத்திற்கு பணம் கொடுத்துள்ளார். பின்னர் அவர்கள் சர்ச்சுக்கு செல்லாததற்காக அதேபோல 4 மடங்கு பணத்தை வட்டியுடன் கேட்டு துன்புறுத்தியுள்ளார். சட்ட உரிமைகள் கண்காணிப்பகம் (எல்.ஆர்.ஓ) பகிர்ந்துள்ள ஒரு வீடியோவில், இதுகுறித்து பேசிய அந்த பெண், “பிஷப் டாக்டர் அஜய் லால் பனம் கொடுத்து எங்களை வலுக்கட்டாயமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றினார். ஆரம்பத்தில் எங்களுக்கு ரூ. 1,20,000 பணம் கொடுத்தனர். எங்கள் குடும்பத்தாரை சர்ச் ஆராதனைகளில் கலந்து கொள்ளுமாறும், ஹிந்து மதத்தைப் பின்பற்றுவதை நிறுத்துமாறும் கூறினர். நாங்கள் ஆரம்பத்தில் சர்ச் அமர்வுகளில் கலந்துகொண்டோம். ஆனால் பின்னர் எங்களால் முடியவில்லை. எனவே, நாங்கள் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றத் தவறியதாகக் கூறி, சர்ச் அதிகாரிகள் முன்பு வழங்கிய தொகையை நான்கு மடங்காக வட்டியுடன் திருப்பித் தருமாறு அவர்கள் எங்களை மிரட்டத் தொடங்கினர். அவர்கள் கொடுத்ததில் 90,000 ரூபாயை நாங்கள் திருப்பிக் கொடுத்துவிட்டோம். விரைவில் மீதிப் பணத்தைத் திருப்பித் தருவதாகவும் கூறினோம். எனினும், சர்ச் உறுப்பினர்களான தாமஸ், கெவிஜு, ஃப்ளெக்ஸென், ரினு, சஜன் ஆகியோர் எங்களை தொடர்ந்து மிரட்டுகின்றனர். இதுகுறித்து டாமோ காவல் நிலையத்தில் புகார் அளித்த போதிலும், பிஷப் மற்றும் அவரது சீடர்களுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை” என கூறினார். தாமோ ஆட்சியர் எஸ் கிருஷ்ண சைதன்யா, எஸ்.பி டி ஆர் டெனிவார் மற்றும் பிற நிர்வாக அதிகாரிகள் பிஷப் அஜய் லால் மற்றும் அவரது சீடர்களை இந்த வழக்கில் இருந்து காப்பாற்ற முயற்சிக்கின்றனர் என குற்றம் சாட்டப்படுகிறது. இதனிடையே, இந்த சம்பவத்தை அறிந்த தேசிய மகளிர் ஆணையம், இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்படி மத்தியப் பிரதேச டி.ஜி.பிக்கு உத்தரவிட்டுள்ளதுடன் இதில் முழுமையான விசாரணை நடத்தி குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.