கொடிநாள்

பாரத நாட்டின் எல்லைகளை இரவு பகலாகக் காத்துவரும் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் தினம் கொடி நாள். அவர்களாலேயே நாம் அமைதியாக இம்மண்ணில் வாழமுடிகிறது. நாம் இரவில் நிம்மதியாக தூங்க அவர்கள் கண் விழித்து காவல் காக்கின்றனர். இப்படி நாட்டின் கண்ணாக போற்றப்படும் ராணுவத்தினரை பாதுகாப்பது அவசியம் என்று பல தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து ராணுவத்தினர் நலன் குறித்து முடிவு செய்ய ராணுவ அமைச்சகத்தின் சார்பில் 1949 ஆகஸ்ட் 28ல் ஒரு குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவின் ஆலோசனையின்படி போரில் ஈடுபடும் ராணுவத்தினருக்கு காயம் ஏற்பட்டால் உதவுதல், போரில் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு உதவுதல், ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவத்தினருக்கு உதவி செய்தல் ஆகிய 3 நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு கொடி நாள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 1949 டிசம்பர் 7ம் தேதி கொடி நாளாக அறிவிக்கப்பட்டது.

நிதி வசூலில் அரசும் தொண்டு நிறுவனங்களும் ஈடுபடுகின்றன. ராணுவத்தின் ஒரு அங்கமான ‘கேந்தர்ய சைனிக் போர்டு’ அமைப்பின் மூலம் இந்த நிதி பராமரிக்கப்படுகிறது. பனி படந்த இமயமலை, அடர்ந்த காடுகள், பாலைவனம், பரந்து விரிந்த கடல் பகுதிகளை காவல் காப்பதுடன், பேரிடரின்போதும் நம்மை காக்க ஓடிவருகின்றனர் ராணுவத்தினர். நாட்டிற்காக தனது உயிரையே தியாகம் செய்ய முற்படும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் பேணிக் காத்திடுவது நமது சமூகக் கடமை.

இந்த சமூகக் கடமையை நிறைவேற்றிடும் பொருட்டு கொடிநாள் அன்று கொடி விற்பனை மூலமும் நன்கொடை மூலமும் திரட்டப்படும். இந்த நிதி முப்படை வீரர்களின் குடும்ப நல்வாழ்வு, உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வு, முன்னாள் படை வீரர்களின் மேம்பாடு போன்ற பணிகளுக்கு செலவிடப்படுகிறது.

துணிச்சல் மிகுந்த நமது ராணுவ வீரர்களுக்கு நாம் அளிக்கும் ஆதரவிற்கான சான்று கொடிநாள் நிதி. ராணுவ வீரர்களை களத்திற்கு அனுப்பிவிட்டு கனத்த இதயத்துடன் வீட்டில் காத்திருக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கு, கவலைபடாதீர்கள் நாங்கள் இருக்கிறோம் என ஆறுதல் கூறும் நாள்ம் இன்று. ராணுவத்தினர் மீதான நமது நன்றி உணர்வின் அடையாளம் இது. எனவே, நாமும் தாராளமாக கொடிநாள் நிதி அளிப்போம்.

உண்மையான தேசத் தலைவர்களை மனதில் நிறுத்துவோம். நமக்காக எல்லையில் பல இன்னல்களை சந்தித்து தேசம் காக்கும் ராணுவ வீரர்களை போற்றுவோம்.

ஜெய் ஹிந்த்