தி.மு.கவை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்

கிருஷ்ணகிரியில் ராணுவ வீரரை அடித்து கொலை செய்த தி.மு.க கவுன்சிலர் மற்றும் தி.மு.க குண்டர்களை கண்டித்து நாளை தமிழக பா.ஜ.க சார்பில் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடத்தப்படுகிறது. இது தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தி.மு.க ஆட்சியில், அராஜகங்களும், அத்துமீறல்களும், குற்றச் செயல்களும், மக்கள் விரோதப் போக்கும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நாட்டைக் காக்கும் ராணுவ வீரர் படுகொலை செய்யப்படும் அவலம் நிலவுகிறது. சமூக விரோதிகளால் எதிர்க் கட்சித் தலைவர்கள் தாக்கப்படுகின்றனர். பா.ஜ.க பட்டியலினப் பிரிவின் தலைவர் தடா பெரியசாமி இல்லத்தின் மீதும், கார் மீதும் கொலை வெறி தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. இதுபோன்ற அச்சுறுத்தல்கள் அவருக்கு இருப்பதை எடுத்துச் சொல்லி, அவரது பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய காவலரை நியமிக்க வேண்டி, காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை. மதுவால் ஏற்படும் தீமைகளை அறிந்திருந்தும், அதிலிருந்து கிடைக்கும் தனிப்பட்ட கொள்ளை லாபத்துக்காக, மக்களை மதுவுக்கு அடிமைகளாக தி.மு.க அரசு மாற்றிக் கொண்டிருக்கிறது. 9ம் வகுப்பு மாணவன் மது அருந்திவிட்டு வகுப்புக்கு வந்ததாக சமீபத்தில் மாவட்ட ஆட்சியரே மனம் திறந்து பேசியிருக்கிறார். எல்லா மட்டத்திலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது. சின்னஞ்சிறார்களும் அதை எளிதாக பெற முடிகிறது. இதற்கு பெயர்தான் திராவிட மாடலா? இலவசத்தையும், பணத்தையும் கொடுத்து மக்களின் வாக்குகளை வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில், மக்களுக்கு கொடுப்பதற்காக அந்த மக்களையே கொள்ளையடிக்கும் தி.மு.க ஆட்சியை கண்டித்து பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ளும் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. இருண்ட காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தமிழகத்தை மீட்க, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை அருகில் இருந்து, போர் நினைவு சின்னம் வரை, மாலை நான்கு மணிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மாபெரும் பேரணி நடைபெற இருக்கிறது. இந்த அறப் போராட்டத்தில் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.