அரியலூரில் விவசாயி பலியான வழக்கு

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு தொடர்பாக அருண்குமார் என்பவரை தேடி, கடந்த நவம்பர் 25ம் தேதி காசங்கோட்டையைச் சேர்ந்த விவசாயி செம்புலிங்கத்தின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த காவலர்கள், அங்கு செம்புலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினரை கடுமையாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த செம்புலிங்கம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி டிசம்பர் 8ம் தேதி உயிரிழந்தார். இதுகுறித்து செம்புலிங்கத்தின் உறவினர் கார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.அதில், “மாநில காவல்துறை சம்பந்தப்பட்டுள்ள இந்த வழக்கை அவர்களே விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வர இந்த விசாரணையை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது செம்புலிங்கத்திடம் பெற்ற வாக்குமூலத்துக்கு முரணாக வேறு வாக்குமூலத்தை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.இதேபோல அவர்கள் பிரேதப் பரிசோதனை அறிக்கையையும் திரிக்கும் வாய்ப்புள்ளதால் தடயவியல் மருத்துவ துறை நிபுணர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.அதை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சந்தேக மரணம் என்ற பிரிவில்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.உதவி ஆய்வாளர்தான் விசாரணையை நடத்தி வருகிறார்” என்று தெரிவித்தார்.ஆனால் காவல் துறை தரப்பு வழக்கறிஞர், “விசாரணையில் முன்னேற்றம் உள்ளது.உரிய முறையில் விசாரணை நடத்தப்படும்” என உறுதியளித்தார்.செம்புலிங்த்தின் பிரேதப் பரிசோதனை அறிக்கையையும் தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிபதி, “இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காவலர்கள் விசாரணை குழுவில் இடம் பெறக்கூடாது என்ப உறுதி செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.