பொய் விமர்சனம் உடைக்கப்பட்டது

மத்திய அரசு, சமீபத்தில் 1 லிட்டர் பெட்ரோலுக்கான கலால் வரி 8 ரூபாயும், டீசலுக்கான விலை 6 ரூபாயும் குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. மேலும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு உருளைக்கு மானியம், விவசாயிகளுக்கான உரத்திற்கும் அதிகப்படியான மானியம், இரும்பு, எஃகு, பிளாஸ்டிக் மீதான சுங்கவரி குறைப்பு என பல சலுகைகளை அறிவித்தது. பொதுமக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டது. எனினும், கடந்த 2014ல் பா.ஜ., அரசு அமைந்ததற்கு முன் இருந்த வரிகளையே தொடர வேண்டும், பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்துள்ளதால் மாநிலங்களுக்கான வரி வருவாய் குறையும் என தமிழகம் உட்பட பல மாநில அரசுகள் குறைகூறிவந்தன. விலை குறைப்பு எப்படி செய்யப்பட்டது, எந்த வரி குறைக்கப்பட்டது, அதனால் மாநிலத்துக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற அடிப்படைகளைகூட  புரிந்துகொள்ளாத தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் உட்பட பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இவர்களின் பொய்யான விமர்சனங்களுக்கு பதில் அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘கடந்த ஆண்டுக்கு செய்யப்பட்ட விலை குறைப்பால் 1.20 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய வரி குறைப்பால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். எனினும், தற்போது செய்யப்பட்டுள்ள வரி குறைப்பால் ஏற்படும் மொத்த சுமையையும் மத்திய அரசே ஏற்கிறது. இந்த அறிவிப்பால் மாநிலங்களுக்கான வரி வருவாய் குறையாது’ என தெரிவித்துள்ளார்.