பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த பல்வேறு பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு, தனியார் அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைப் பகுதிகளில் சுழற்சி முறையில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நாள்தோறும் சராசரியாக 25,000 முதல் 30,000 வரை ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் 500 நபர்களுக்கும், காசிமேடு மீன்பிடி துறைமுக வளாகத்தில் 500 நபர்களுக்கும், சிந்தாதரிப்பேட்டை மீன் மார்க்கெட் பகுதியில் 100 நபர்களுக்கும் நாள்தோறும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம், இந்த பகுதிகளில் தொற்று பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது. கொரோனா தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் பரவாமல் தடுக்க மேற்குறிப்பிட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளுக்கு மக்கள் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்’ என சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.