பெண்களுக்கு அதிகாரமளித்தல் பற்றி உலகெங்கும் பலர் பேசி வருகின்றனர். ஆனால் நடைமுறையில் அதனை மிகச்சிறப்பாக செயல்படுத்துவது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அளித்த தேசப்பற்று, சேவை மனப்பான்மை, சமுதாய நலன், மக்கள் தொண்டு பயிற்சி என்ற பின்புலத்துடன் செயல்படும் ஹிந்து மற்றும் தேசிய தொண்டு அமைப்புகள் மட்டுமே. இலவச டியூஷன், மருத்துவ சேவை போன்ற தினசரி ஆயிரக்கணக்கான சிறிய தொண்டுப் பணிகளை அவர்கள் செய்து வருகின்றனர். இது மட்டுமில்லாமல், மழை, வெள்ளம், சுனாமி, கொரோனா போன்ற இயற்கைப் பேரிடர் காலங்களில் இந்த அமைப்புகள் செய்துவரும் தொண்டுப் பணிகள் ஏராளம். அதனால் பயனடைந்தவர்கள் பல கோடி.
இப்படி இந்த அமைப்புகளின் தொடர் சேவைகளுக்கு பல உதாரணங்கள் நமது நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஏராளமாக உண்டு. இதற்கு சமீபத்திய ஒரு உதாரணமாக திகழ்கிறது சேவா இன்டர்நேஷனலின் உக்ரைன் சேவைப் பணிகள். உக்ரைனில் நடக்கும் போரின் மத்தியில் தங்கள் உயிரையும் உடமையையும் பொருட்படுத்தாது இவர்கள் ஆற்றி வரும் சேவைப் பணிகள் நமது நெஞ்சங்களை நெகிழச் செய்கின்றன.
நமது பாரத தூதரகம் வழங்கிய அறிவுரைகளை மீறி உக்ரைனில் தங்கிய சுமார் 22,000 பாரதப் பிரஜைகள் போரின் இடையே சிக்கித் தவித்தனர். அவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற மத்திய அரசு ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தைத் தொடங்கி வெற்றிகரமாக அவர்களை மீட்டு வருகிறது. இந்நிலையில், கடுமையான குண்டுவெடிப்புகள் காரணமாக உக்ரேனிய எல்லை நாடுகளுக்குச் செல்ல முடியாத மக்களை காத்து அவர்களுக்கு தங்குமிடம், உணவு அளித்து பாதுகாப்பாக எல்லைப் பகுதிகளுக்கு அனுப்ப அங்குள்ள பல்வேறு ஹிந்து கோயில்கள், சேவை அமைப்புகள் களமிறங்கின. அதில் முக்கியமானது ‘சேவா இன்டர்நேஷனல்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம்.
இதன் முன்னூறுக்கும் அதிகமான தன்னார்வத் தொண்டர்கள் உக்ரைனிலும் அதன் எல்லைப்புற நாடுகளிலும் தங்கள் உயிருக்கு ஆபத்து உள்ள சூழ்நிலைகளை பொருட்படுத்தாமல் இந்த சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தன்னார்வலர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைனில் இருந்து 3,000க்கும் மேற்பட்ட மக்களை அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர். இந்த பெண் தன்னார்வலர்கள் பாரதம், உக்ரைன், இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய், ஜெர்மனி, நைஜீரியா என பல நாடுகளை சேர்ந்தவர்கள். வெவ்வேறு நாடுகள், கலாச்சாரங்கள், பின்னணிகள் கொண்ட இவர்கள் அனைவரும் அங்கு ஒரே நோக்கத்திற்காக ஒன்றுபட்டு பணியாற்றுகின்றனர்.
தேவை உள்ளவர்களுக்கு உதவவும், சூழ்நிலைகள் எவ்வளவு ஆபத்தானதாக இருந்தாலும் அவர்களின் உயிரைக் காப்பாற்றவும் அனைத்து முயற்சிகளையும் அவர்கள் எடுக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள். இவர்களைத்தவிர பணிபுரியும் பெண்கள், திருமணமாகி குழந்தைகளைப் பெற்று குடும்பப் பொறுப்பை கவனிக்க வேண்டிய பல பெண்களும் இக்குழுவில் உள்ளனர். தங்கள் பணி, பாதுகாப்பு, குடும்பம், வாழ்க்கை என அனைத்தையும் விட்டுவிட்டு, தினமும் இரவு பகலாக உழைத்து வருகின்றனர். ஆன்லைன், தொலைபேசி வழியாக பதிலளிப்பது, வழிகாட்டுவது, ஆறுதல் கூறுவது, உணவு, தங்குமிடம், போக்குவரத்து போன்ற ஏற்பாடுகளை செய்வது என சேவை செய்து வருகின்றனர் இப்பெண்கள். சர்வதேச பெண்கள் அதிகாரம் பற்றி இந்த பெண்களின் கருத்து முற்றிலும் வேறானது. ‘ஆதரவற்றோர்களுக்கும் சமூகத்திற்கும் உதவுங்கள், சேவை செய்யுங்கள்’ என்பதுதான் அது.