சமத்துவ சிலை பரப்பும் செய்தி

ஐதராபாத்தின் முச்சிந்தலில் உள்ள சின்ன ஜீயர் சுவாமி ஆசிரமத்தில் 216 அடி ராமானுஜரின் சிலையை பார்வையிட்டு வழிபாடு நடத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமீத் ஷா, ‘நம்பிக்கை, ஜாதி, மதம் உட்பட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் சமத்துவம் என்ற கருத்தை ஊக்குவித்த ராமானுஜாச்சாரியாரை இந்த ‘சமத்துவ சிலை’ நினைவுகூருகிறது.

ராமானுஜர் அடக்கமானவர், ஆனால் சிறந்த புரட்சியாளர். பல தீய பழக்கவழக்கங்களுக்கு முடிவுகட்டினார். பாரதத்தின் வரலாற்றில், சனாதன தர்மம் பல ஏற்றத் தாழ்வுகளை கண்டு, காலப் போராட்டத்தைத் தாங்கி, தன் இருப்பைக் காப்பாற்றிக் கொண்டு, காலாவதியாகாமல் முன்னேறி வருவது தெரியும்.

கோயில்களை ஆக்கிரமிப்பாளர்கள் தாக்கியபோது, ​​ராமானுஜர் வீட்டில் கடவுளை வணங்கும் பாரம்பரியத்தை துவக்கி வைத்தார். அதன் காரணமாக சனாதன தர்மம் இன்று தப்பிப்பிழைத்துள்ளது. சமூகத்தில் சமநிலையை நிலைநாட்டுவதற்காக, துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதத் தத்துவங்களுடன் பல ஆச்சார்யர்கள் பணியாற்றி உள்ளனர். அதில் ராமானுஜரின் மிகப்பெரிய பங்களிப்பும் உள்ளது.

ராமானுஜர் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு ஜாதி பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவர புரட்சிகரப் பணிகளைச் செய்தார். அனைவருக்குமான வழிபாட்டு உரிமைகள், பெண்களுக்கு அதிகாரம், கோயிலின் செயல்பாடுகள், மொழி சமத்துவம் என பல புரட்சிகளை மேற்கொண்டார்.

எந்த மதத்தையோ, பிரிவையோ பின்பற்றுபவர்களாக இருந்தாலும், அவர்கள் ஒருமுறையாவது இங்கு வர வேண்டும். இந்த சிலையை பார்த்தாலே மனதுக்கு அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். இச்சிலை, ராமானுஜரின் சமத்துவம், சனாதன தர்மம் பற்றிய செய்தியை உலகுக்கு பரப்பும்.

சமத்துவச் சிலை அமைக்கப்பட்டுள்ள இதே காலகட்டத்தில், பிரமாண்டமான ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது, காசி விஸ்வநாதர் வழித்தடத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது, கேதார்நாத்தில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பத்ரிநாத் விரிவாக்கமும் நடைபெறவுள்ளது. இவை அனைத்தும் கடவுளின் ஆசீர்வாதத்தால் மட்டுமே முடியும். இது சனாதன தர்மத்தின் ஒளிமயமான அறிவை உலகுக்கு பரப்ப வேண்டிய காலம்.

ராமானுஜாச்சாரியாரின் இந்தச் சமத்துவச் சிலை பல ஆண்டுகளாக விசிஷ்டாத்வைதம், சமத்துவம் மற்றும் சனாதன தர்மத்தின் செய்தியை உலகுக்குப் பரப்பும் என நான் நம்புகிறேன்’ என்று உரையாற்றினார்.