நிலக்கரி சுரங்க ஊழல் புகார் தொடர்பாக சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை திடீர் சோதனையை நடத்தினர். சத்தீஸ்கரில் இருந்து வெளி மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படும் நிலக்கரியில் ஒவ்வொரு டன்னுக்கும் ரூ. 25 வீதம் சட்டவிரோதமாக பணம் வசூலிக்கப்பட்ட வழக்குத் தொடர்பாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், ”நிலக்கரி சுரங்க முறைகேடு மூலம் பலனடைந்தவர்கள் என கருதப்படுபவர்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் பொருளாளர் ராம்கோபால் அகர்வால், சத்தீஸ்கர் மாநில கட்டுமான வாரிய தலைவர் சுசில் சன்னி அகர்வால், மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆர்.பி. சிங், சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் தேவேந்திர யாதவ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான சௌமியா சௌராஷ்யா, சூர்யகாந்த் திவாரி, சமீர் விஷ்னோய், தொழிலதிபர் சுனில் அகர்வால் என 9 பேருக்குச் சொந்தமான 12க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.