உணவு பதப்படுத்தும் துறைக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் ஒப்புதலுக்காக மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இத்துறைக்கு, ரூ. 10,900 கோடி உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை அளிக்க, இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் தொகை, 2026 – 27 நிதியாண்டுவரை ஆறு ஆண்டுகளில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, 2021 – 22ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், 13 துறைகளுக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதில், ஏற்கனவே ஆறு துறைகளுக்கான ஊக்கத் தொகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உணவுத்துறை அமைச்சர் பியுஷ் கோயல், ‘நம் நாட்டில் தயாரிக்கப்படும் உண்பதற்கு தயாரான பதப்படுத்தப்பட்ட பழங்கள், காய்கறிகள், கடல் உணவுகள், பால் பொருட்கள், இயற்கை விவசாய உணவுகள் போன்றவற்றிற்கு வெளிநாட்டு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே, இந்த ஊக்கத்தொகை, விவசாயிகளுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமைவதுடன் உணவு பதப்படுத்தும் துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவும் உதவியாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.