ஏக் பாரத் ஆத்மநிர்பர் பாரத்

தேசிய பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு மன்றம் (FANS) “ஏக் பாரத் ஆத்மநிர்பர் பாரத் ஷ்ரேஷ்ட பாரத்” என்ற கருத்தை ஊக்குவிப்பதற்காக விரிவான வேலைத் திட்டத்தை ஆண்டு முழுவதும் நாடெங்கிலும் செயல்படுத்த கருத்தரங்குகளை ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்தின் மகாபலிபுரத்தில் உள்ள ஷெல்டர் பீச் ரிசார்ட்டில் நடைபெற்ற இந்த அமைப்பின் இரண்டு நாள் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்திற்கு FANS அமைப்பின் தேசிய தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஆர்.என்.சிங் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் FANS புரவலர் டாக்டர் இந்திரேஷ் குமார், பொதுச் செயலாளர் சர்தார் ஜஸ்பிர் சிங் போன்றோருடன் நாடு முழுவதும் இருந்து வந்திருந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். யுனெஸ்கோவின் மூத்த ஆலோசகர் வெங்கட்ராமன், சின்மயா மிஷனின் சுவாமி மித்ரானந்தா உள்ளிட்ட சிறப்பு அழைப்பாளர்களும் இதில் பங்கேற்று பேசினர். ‘ஏக் பாரத்-ஆத்மநிர்பர் பாரத்-ஷ்ரேஷ்டா பாரத்’ என்ற கருத்தரங்கங்கள் மற்றும் வலைப்பதிவுகளைத் தவிர, 75வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில், இளைஞர்களுக்கான சைக்கிள் பேரணி, சுதந்திர தினத்தன்று ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றுவது, ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்ஸவம்’ நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாசு இல்லாத சூழல் குறித்த செய்தியை தெரிவிக்கும் வகையில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.