மத்திய அரசுக்கு சொந்தமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பி.இ.எல்) நிறுவனத்துடன் நமது கடற்படைக்கென விஷேஷ டிரோன் எதிர்ப்பு அமைப்புகளை (NADS) உருவாக்க கடற்படை ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளது. அதன்படி, பி.இ.எல் லேசர் உதவியுடன் டிரோன்களை கண்டறிந்து லேசரால் அதனை எரித்து அழித்தல், அல்லது அதனை ஜாம் செய்து செயலற்றதாக ஆக்குதல் போன்ற இருவேறு திறனுடன் கருவிகளை உருவாக்கும். மேக் இன் இந்தியா மற்றும் ஆத்ம நிர்பர் திட்டத்தின் கீழ், முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட உள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ) இதற்கான தொழில் நுட்ப உதவிகளை அளிக்கிறது. விரைவில் ராணுவமும் விமானப்படையும் கூட பி.இ.எல் நிறுவனத்துடன் டிரோன் தயாரிப்பு ஒப்பந்தங்களை இறுதி செய்ய உள்ளன. இந்த டிரோன் பாதுகாப்பு அமைப்பு டி.ஆர்.டி.ஓவால் உருவாக்கப்பட்டு வெர்றிகரமாக ஏற்கனவே சோதிக்கப்பட்டுள்ளது. இது 2020 குடியரசு தினம், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வருகை, சுதந்திர தினம் 2020, குடியரசு தினம் 2021 மற்றும் சுதந்திர தினம் 2021 உள்ளிட்ட பாதுகாப்புப் பணிகளின்போது பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.