சின்னங்கள் இல்லாத ஓட்டு இயந்திரம்

பா.ஜ.க பிரமுகரும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாய, உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார். அதில், அரசியலில் ஊழல், குற்றங்களை ஒழிக்க, ஓட்டு சீட்டு மற்றும் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளர்களின் பெயர்களுக்கு நேராக பொறிக்கப்படும் அரசியல் கட்சிகளின் சின்னங்களை நீக்கிவிட்டு, அங்கு வேட்பாளரின் பெயர், வயது, கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்கள், புகைப்படத்துடன் இடம் பெற வேண்டும். இதனால், கட்சிகளின் அடிப்படையில் வேட்பாளர்களை தேர்வு செய்யாமல், படித்த, புத்திசாலியான, நேர்மையான வேட்பாளர்களை மக்கள் அடையாளம் காண முடியும். வேட்பாளர் தேர்வில் அரசியல் தலைவர்களின் சர்வாதிகார போக்கு முடிவுக்கு வரும். உண்மையான அர்பணிப்புடன் மக்கள் பணி செய்பவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட, வாய்ப்பு கிடைக்கும். எனவே, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், அரசியல் கட்சியின் சின்னங்களை பொறிப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானதாக உத்தரவிட வேண்டும் என  கோரியிருந்தார். அட்டர்னி ஜெனரல், சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோருக்கு இம்மனுவின் நகல்களை அளிக்க கூறிய உச்ச நீதிமன்றம், இதன் விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தது.