கலாநிதி மாறன் சம்பளம்

தென் இந்தியாவில் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி குழுமத்தின் பிரோமோட்டர்களாக இருக்கும் கலாநிதி மாறன், அவருடைய மனைவியான காவேரி கலாநிதி ஆகியோர் பாரதத்தில் அதிக சம்பளம் வாங்கும் நிறுவனத் தலைவர்களாக உள்ளனர். கலாநிதி மாறன், நிர்வாக இயக்குனர் காவேரி கலாநிதி ஆகியோர் தலா 87.50 கோடி ரூபாய் சம்பளம் பெறுகின்றனர். கலாநிதி மாறனின் மகளான காவ்யா கலாநிதி வருடத்திற்கு 1.09 கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெறுகிறார். இப்படிக் கடந்த 10 வருடத்தில் கலாநிதி மாறன் குடும்பத்தினர் இணைந்து சுமார் 1,470 கோடி ரூபாய் தொகையைச் சம்பளமாக பெற்றுள்ளனர். கடந்த வாரம் சன் டிவி குழுமத்தின் வருடாந்திர பொதுக் கூட்டம் நடந்தது. அதில், கலாநிதி மாறன், காவேரி கலாநிதி ஆகியோருக்கு 25 சதவீதம் சம்பள உயர்வுடன் 5 வருட பணி கால நீட்டிப்புத் திட்டம் முன்வைக்கப்பட்டது. இந்த முடிவிற்கு நிறுவன முதலீட்டாளர்களில் 86.3 சதவீதம் பேர் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், மாறன் குடும்பத்தினர் இக்குழுமத்தில் 75 சதவீத பங்குகளை வைத்துள்ளனர். மற்ற முதலீட்டாளர்கள் 12 சதவீத பங்குகளை மட்டுமே வைத்துள்ளனர் என்பதால், எதிர்ப்பு எடுபடாமல் போனது. கலாநிதி மாறன் சம்பளம் தற்போது 87.50 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.