பொதுச் சுகாதார ஆர்வலரான தினேஷ் எஸ் தாக்கூர் பகிர்ந்துள்ள ஒரு டுவிட்டர் பதிவில், “டெல்லி விமான நிலையத்தில் இன்று சுவாரஸ்யமான அனுபவம் எனக்கு கிடைத்தது. புத்தகக் கடை ஒன்றில் சூயிங்கம் பாக்கெட் வாங்கினேன். அதனை பில் போட சென்றபோது அவர்கள் எனது அலைபேசி எண்ணை கேட்டார்கள். சூயிங்கம் வாங்குவதற்கு எதற்கு எனது அலைபேசி எண்? என்று நான் கேட்டபோது, ‘பாதுகாப்பு காரணங்களுக்காக’ என்று என்னிடம் கூறினார்கள். சூயிங்கம் வாங்குவதற்கும் பாதுகாப்புக்கும் என்ன சம்பந்தம் என நான் கேட்டதற்கு அவர்களிடம் எவ்விதமான பதிலும் இல்லை. எனவே விழித்தார்கள். அங்கு அக்கடையில் மேலாளர் வந்தார், அவரிடம் பாதுகாப்பு காரணம் என்றால் எப்படி இரண்டு பாதுகாப்பு சோதனைகளைத் தாண்டி நான் இங்கு வந்திருக்க முடியும் எனக் கேட்டேன். இதனால் எதையும் வாங்காமல் வந்துவிட்டேன்” என கூறியிருந்தார். மேலும் பல பயணிகள் எவ்விதமான கேள்வியும் கேட்காமல் அவர்களது அலைபேசி எண்ணை கொடுத்து வருகிறார்கள். நாம் இங்கே தவறவிடுவது என்ன? நாம் எப்படி இவ்வளவு அறியாமையுடனும் அக்கறையற்றவர்களாகவும் இருக்க முடியும்? என்று கேள்வி கேட்டுள்ளார்.
தினேஷ் தாக்கூரின் இந்த டுவிட்டர் பதிவுக்கு பதிலளித்த மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், “உங்கள் அலைபேசி எண்ணை ரீடைல் விற்பனையாளர் வைத்திருப்பதற்கு நியாயமான காரணம் எதுவும் இல்லை என்றால் கொடுக்க வேண்டாம். டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா (DPDP) மசோதா சட்டத்திற்குப் பிறகு பாரத மக்களின் டிஜிட்டல் தனிப்பட்ட தரவுகளைத் தவறாகப் பயன்படுத்துவது நிறுத்தப்படும்” என தெரிவித்தார். டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா 2022 மூலம் தனிநபர் தகவல் திருடப்பட்டால் ரூ. 500 கோடி வரை அபராதம் விதிக்கும் விதிமுறை உள்ளது. மக்களின் தனிநபர் தரவுகளைச் சேகரிக்கும் நிறுவனங்கள், போதுமான பாதுகாப்பு கட்டமைப்புகள் உருவாக்காமல் தகவல் திருட்டை எதிர்கொண்டால், தனிநபர் தகவலைப் பாதுகாக்காமல் விட்டதற்காக அவர்களுக்கு ரூ. 500 கோடி வரை அபராதம் விதிக்கப்படலாம் என இந்த மசோதா கூறுகிறது. போட்டி மிகுந்த இன்றைய உலகில், சந்தையில் தங்களது வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க பல விற்பனை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் எண்களை வாங்குவது வாடிக்கையாக நடக்கிறது. இந்தத் தகவல்கள் சில பணியாளர்களால் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. தினமும் இணையத் திருட்டு, தகவல் திருட்டுகள் நடக்கும்தற்கால டிஜிட்டல் உலகில் விற்பனையாளர்களிடம் கொடுக்கப்பட்டும் தனிநபர் தகவல் பாதுகாப்பானதா என்ற கேள்வி எழுந்துள்ள சூழலில், மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இந்த முக்கிய ஆலோசனையை வழங்கியுள்ளார்.