விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலப்பாட்ட கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் துரை கற்பகராஜ். இவர் தி.மு.க சார்பில் ஒன்றிய கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது ஊராட்சி ஒன்றிய துணைச் சேர்மனாக இருந்து வருகிறார். தேர்தலில் போட்டியிடும் போது அந்த பகுதிக்கு சாலை, குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தருவேன் என அனைத்து அரசியல்வாதிகள் போலவே இவரும் வாக்குறுதி கொடுத்துள்ளார். வெற்றி பெற்ற பிறகு வழக்கம்போல எந்த அடிப்படை வசதியும் செய்யாமல் விட்டுவிட்டார். ஆனால், தான் வசிக்கும் பகுதிக்கு மட்டும் உயர்மின் கோபுர விளக்குகள், சாலை வசதிகள் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். தங்கள் பகுதிகளுக்கும் சாலை, மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுவந்த பொதுமக்களிடம், காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டீங்க உங்கள் பகுதிக்கு நான் ஏன் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும்? என திமிறாக கூறி மக்களை திருப்பி அனுப்பியுள்ளார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பகத்சிங் என்ற இளைஞர் நியாய விலை கடையில் பொருட்கள் வாங்க சென்றுள்ளார், அப்போது அங்கு வந்த துரையிடம் தங்கள் உரிமையை கேட்டுள்ளார். அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதுடன், நான் இந்த ஏரியாவில் பழைய ரவுடி, கொலை செய்து விடுவேன் என அடித்து விரட்டியுள்ளார் கவுன்சிலர் துரை. இது குறித்து பகத்சிங், வீடியோ ஆதாரத்துடன் இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து தி.மு.க ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் துரை மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.