திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நரசிங்கபுரம் கிராமத்தில் இரவு நேரங்களில்அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்து செம்மண்ணை வெட்டியெடுத்து கடத்தி வெளியே விற்பனை செய்யப்பட்டு வருவதை தடுத்த வருவாய்துறை அதிகாரி (ஆர்.ஐ) பிரபாகரனை, நரசிங்கபுரம் தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன் மற்றும் ஜே.சி.பி ஓட்டுனர் மணிகிருஷ்ணன் உள்ளிட்டோர் மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளில் பேசி கடுமையாக தாக்கினர். இதனால், அவரது மண்டை உடைந்தது. இதனை கண்டித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நரசிங்கபுரம் ஊராட்சியில் அனுமதியின்றி சட்டவிரோதமாகச் செம்மண் அள்ளிய தி.மு.கவினரைத் தடுத்த துறையூர் வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை, நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தி.மு.க தலைவர் மகேஸ்வரன் மற்றும் அவரின் கூட்டாளிகளான மணி, தனபால் ஆகியோர் கல்லைக் கொண்டு கடுமையாகத் தாக்கி, கொல்ல முயன்றுள்ளனர். பொதுமக்களால் மீட்கப்பட்ட பிரபாகரன், துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திறனற்ற தி.மு.க ஆட்சியில், அரசு அதிகாரிகள் கொல்லப்படுவதும், கொலைவெறித் தாக்குதல்களுக்கு ஆளாக்கப்படுவதும் தொடர்கிறது. அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு வழங்க இயலாத கையாலாகாத அரசாக இருக்கிறது தி.மு.க அரசு. மணல் கொள்ளையில் ஈடுபடும் தி.மு.கவினரை, கட்சியிலிருந்து நீக்குவதாகக் கண்துடைப்பு நாடகமாடி விட்டு, ஓரிரு மாதங்களில் பின் வாசல் வழியாக மீண்டும் கட்சியில் இணைத்து சட்டம் ஒழுங்கை கேலிக்குள்ளாக்குகிறது தி.மு.க. மணல் கொள்ளையர்களால் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தாக்கப்படுவதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. இது போன்ற சம்பவங்கள் தொடராமல் தடுக்க வேண்டியதும், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியதும் தமிழக அரசின் கடமை” என எச்சரித்துள்ளார்.