திருப்பூரில், இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று விசர்ஜனம் செய்யப்பட்டன. இதன் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய அண்ணாமலை, “பல நுாறு ஆண்டுகள் முன் வீரசிவாஜி இதுபோல விநாயகர் சதுர்த்தி விழாவை மக்களுடன் சேர்ந்து கொண்டாடினார். இன்றும் நம் நாட்டில் அது தொடர்கிறது. ஹிந்து என்பதை மதம் என்று மட்டுமில்லாமல், அதை வாழ்வியல் முறையாகத் தான் மக்கள் பார்க்கின்றனர். தமிழகத்தில், தற்போது ஆட்சியில் உள்ள தி.மு.க., மதசார்பற்ற கட்சி, ஆட்சி எனக் கூறிக் கொண்டு, பிற மதங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பதோடு, ஹிந்து மதத்தை எதிர்த்து செயல்படுகிறது. பிற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் ஸ்டலின், ஹிந்து மத பண்டிகை என்றால் மட்டும் முரண்டு பிடிக்கிறார். தமிழகத்தில் மதப்பிரச்னையை ஊக்குவிக்கும் ஆட்சியாகதான் தி.மு.க உள்ளது. முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் மக்கள் பிரதிநிதிகள், ஹிந்து மதத்தை கொச்சைப்படுத்தி பேசுகின்றனர். பிரிவினைவாதம் பேசுகின்றனர். அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற கோஷத்தை முன்னெடுத்துள்ளனர். அவர்கள் நடத்திய கூட்டாட்சியின் நடவடிக்கையை மக்கள் கண்டுள்ளனர். ஹிந்து மக்கள் மத்தியில் இன்று ஒரு பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் தி.மு.க காட்டும் ஹிந்து எதிர்ப்பு தான் என்று கூறலாம். தனி மெஜாரிட்டியுடன் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு நமது நாட்டு மக்கள் பெருமைப்படும் வகையில் ஆட்சி நடக்கிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. சுயசார்பு பாரதத்தை பிரதமர் மோடி உருவாக்கி வருகிறார். பாரத கலாசாரத்தை பேணிக்காத்து வருகிறார். அனைத்து மதத்தையும் ஒன்றாக நினைத்து பண்டிகைக்கு பிரதமர் வாழ்த்து கூறி வருகிறார். ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஹிந்து மத பண்டிகைக்கு வாழ்த்து கூறவில்லை. இதுதான் மதசார்பற்ற அரசா என்பதை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். ராமர் கோயில் கட்ட தேசம் முழுவதும் நிதி திரட்டப்பட்டபோது அதிக நிதி அளித்த முதல் 3 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. தமிழகம் எப்போதும் ஆன்மிக பூமிதான். தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்ட நம்மிடம் வாக்கு என்ற ஆயுதம் உள்ளது. வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பா.ஜ.கவுக்கு நாம் வழங்க வேண்டும்” என கூறினார்.