தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தி.மு.க., – எம்.எல்.ஏ., அண்ணாதுரை, அக்கட்சியின் தெற்கு மாவட்ட செயலராகவும் உள்ளார்.
சமீபத்தில், ஏரியில் மண் அள்ளியவர்களை விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் சாவியை திருப்பித் தரவும் கேட்டு, டி.எஸ்.பி., பாலாஜியிடம் அவர் வாக்குவாதம் செய்த ‘ஆடியோ’ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மாவட்ட செயலரும், எம்.எல்.ஏ.,வுமான அண்ணாதுரையின் ஆதரவாளர்கள், போலீசாருக்கு எதிராக, சமூக வலைதளங்களில் மிரட்டல் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
அவற்றில் சில: தி.மு.க., மாவட்ட செயலர் என்பவர் ஜில்லா கலெக்டருக்கு சமம் என்பதை காவல் துறையினருக்கு கழகத்தினர் செயல்பாட்டின் மூலம் தெரியப்படுத்த வேண்டும்.
தி.மு.க.,வினரை மதிக்காமல், திமிராக போலீசார் நடப்பதற்கு யார் காரணம்? அ.தி.மு.க., ஆட்சியில் அதிகாரிகள், இதுபோல திமிராக நடக்க முடியுமா… ஒரு மாவட்ட செயலருக்கே இந்த நிலை எனில், கழகம் தவறான பாதையில் செல்கிறது!
காவல் துறையில் கறுப்பு ஆடுகள் களையப்படும் வரை கழக ஆட்சிக்கு களங்கமே ஏற்படும். முதல்வரே, கறுப்பு ஆடுகள் களை எடுப்பு பட்டுக்கோட்டை காவல் நிலையத்திலிருந்து துவங்கட்டும்.
பட்டுக்கோட்டை டி.எஸ்.பி., போல, தமிழகத்தில் நிறைந்து காணப்படும் அ.தி.மு.க., ஆதரவு காவல் துறையினரை களையெடுக்காவிட்டால், தி.மு.க., -எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவராக இதுபோல அசிங்கப்படுத்தப்படுவர். இவ்வாறு மிரட்டல் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.